ஆசை ஆசையாக டூர்.. திடீரென வெடித்து கிளம்பிய எரிமலை.. கருகி பலியான பிரதாப்-மயூரி தம்பதி

ஆசை ஆசையாக டூர்.. திடீரென வெடித்து கிளம்பிய எரிமலை.. கருகி பலியான பிரதாப்-மயூரி தம்பதி

வெலிங்டன்: இந்திய-அமெரிக்க தொழிலதிபர் மற்றும் அவர் மனைவி நியூசிலாந்தில் ஒரு பெரிய எரிமலை வெடிப்பில் சிக்கி பலியான சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

சம்பவம் நடந்தது, டிசம்பர் 9 ம் தேதி. அமெரிக்காவில் வசித்து வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபரான பிரதாப் சிங் மற்றும் அவரது மனைவி மயூரி ஆகியோர் அன்றைய தினம்தான், நியூசிலாந்தின் பிரபலமான வெள்ளை தீவுக்கு சென்றிருந்தனர்.

அவர்கள் சென்ற பகுதியில் பெரும் எரிமலை வெடிப்பு ஏற்பட, அதில் பரிதாபமாக சிக்கிக் கொண்டனர். இதில் மயூரி உடல் கருகி சிகிச்சை பெற்று, டிசம்பர் 22ம் தேதி, சிகிச்சை பலனின்றி, இறந்தார். தீக்காயங்களுக்கு ஆளான பிரதாப் சிங் இப்போது சிகிச்சை பலனின்றி பலியாகிவிட்டார்.

நியூசிலாந்தின் மிடில்மோர் மருத்துவமனையில் பிரதாப் சிங் சிகிச்சை பெற்று வந்தார். பிரதாப் சிங்கிற்கு, பால் என்றும் மற்றொரு பெயர் உள்ளது. இந்த சம்பவத்தில், அவரது உடலில் பாதிக்கும் மேல் தீக்காயம் ஏற்பட்டது.

தம்பதியரின் மூன்று குழந்தைகளும், மயூரியின் தாயுடன், கப்பலில் தங்கியிருந்தனர் என்பதால், நல்ல வேளையாக எரிமலை விபத்தில் காயமடையவில்லை என்று கூறப்படுகிறது.

ராயல் கரீபியன் பயணக் கப்பல் மூலமாக, வெள்ளை தீவுக்கு மொத்தம் 47 பேர் சுற்றுலா சென்றுள்ளனர். அதில் பிரதாப் சிங் தம்பதியும் அடங்கும். எரிமலை வெடிப்பில் சிக்கி, ஆரம்பத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். 24க்கும் அதிகமானோர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை எரிமலை வெடிப்பின் விளைவாக 21 பேர் இறந்துள்ளனர்.

பிரதாப் சிங், சேவா இன்டர்நேஷனலின் அட்லாண்டா கிளைத் தலைவராக இருந்தார். இது ஒரு லாப நோக்கற்ற அமைப்பாகும்.

பிரதாப் சிங் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், “நம்பமுடியாத கனமான இதயத்துடன் இதை தெரிவிக்கிறோம். வெள்ளை தீவு சம்பவத்தில் எனது மாமா பிரதாப் சிங் (பால் என்றும் பெயர்) 55 சதவீதம் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தார்.

imageபொய்யான தகவலை பரப்புவதே மிகப்பெரிய மாசு.. சென்னை ஹைகோர்ட் நீதிபதி சேஷாயி வேதனை

அவர் டிசம்பர் 10 ஆம் தேதி வகாடனே மருத்துவமனையில் இருந்து மிடில்மோர் மருத்துவமனையில் உள்ள பராமரிப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவரது அறுவை சிகிச்சைகள் மற்றும் சிகிச்சை முறைகள் முழுவதிலும், தைரியமாக ஒத்துழைத்தார். 50 நாட்கள் கடுமையாக போராடினார். மருத்துவர்கள் அவரை ஒரு” போராளி “என்று வர்ணித்தனர்.

அவர் போராடிய விதத்தில் நாங்கள் அனைவரும் பெருமைப்படுகிறோம். பிரதாப் சிங்கின் மனைவி மயூரி சிங் ( மேரி என்றும் பெயர்) மிடில்மோர் ஐசியுவில் 72 சதவிகித உடல் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார். அவர் போராடி டிசம்பர் 22, 2019 அன்று காலமானார், “. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“பால் மற்றும் மேரிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்: 11 வயது மகன், மற்றும் 6 வயது இரட்டை மகள்கள். அவர்கள் குடும்ப உறுப்பினர்களின் விலைமதிப்பற்ற பராமரிப்பில் இருப்பார்கள்” என்று அந்த அறிக்கையில் மேலும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அதிகாரிகள் எரிமலை வெடிப்பு குறித்து விசாரித்து வருகின்றனர். மூன்று வாரங்களுக்கு முன்னர் தீவில் எச்சரிக்கை நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. பின்னரும் எப்படி, அந்த தீவில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர் என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Source: OneIndia

Author Image
vikram