சேலம் வஉசி சந்தையில் சாமந்தி பூ விலை வீழ்ச்சி கிலோ ரூ20க்கு விற்பனை

சேலம் வஉசி சந்தையில் சாமந்தி பூ விலை வீழ்ச்சி கிலோ ரூ20க்கு விற்பனை

சேலம்: சேலம் வஉசி பூ மார்க்கெட்டிற்கு சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் இருந்து அனைத்து வகை பூக்களும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இங்குள்ள மொத்த வியாபார கடைகளில் இருந்து சில்லரை வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். இதில் தற்போது, சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டணம், வலசையூர், வாழப்பாடி, ஆத்தூர், இடைப்பாடி, மேட்டூர், ஓமலூர், தாரமங்கலம் பகுதிகளில் இருந்தும், தர்மபுரி மாவட்டம் பொம்மிடி, கடத்தூர் பகுதிகளில் இருந்தும் சாமந்தி பூ வரத்து அதிகரித்துள்ளது. இதனால், சாமந்தியின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

மொத்த வியாபார கடைகளில் ஒரு கிலோ சாமந்தி பூ, இன்று காலை ₹20க்கு விற்கப்பட்டது. அதிலும், இரண்டாம் தரமாக இருக்கும் சாமந்தி பூ, கிலோ ரூ10க்கு விற்பனையானது. இதுவே சில்லரை விற்பனை கடைகளில் கிலோ ரூ40 வரையில் விற்கப்பட்டது. கடந்த 20 நாட்களுக்கு முன் சாமந்தி பூ, கிலோ ரூ100 முதல் ரூ130 வரையில் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல், ரோஜா பூக்கள் விலையும் சரிந்துள்ளது. கடந்த 20 நாட்களுக்கு முன் கிலோ ரூ130க்கு மேல் விற்கப்பட்ட நிலையில், இன்று கிலோ ரூ70 முதல் ₹80க்கு விற்பனையானது.

விலை குறைந்ததால், பொதுமக்களும், சில்லரை வியாபாரிகளும் அதனை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில், “சாமந்தி, ரோஜா பூக்கள் விலை சரிந்துள்ளது. அதிலும் சாமந்தி பூ ரூ10, ரூ20க்கு விற்கப்படுவதால், விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை வீழ்ச்சி இன்னும் ஒரு வாரத்திற்கு நீடித்திருக்கும் என கருதுகிறோம்,’’ என்றனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy