நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது

நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது

நெல்லை: பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம் இன்று காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடந்தது. இதில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவின் 4ம் நாளான பிப்.2ம் தேதி நண்பகலில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா நடக்கிறது. இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் வீதி உலா நடக்கிறது. தொடர்ந்து வரும் 8ம் தேதி நெல்லை சந்திப்பு கைலாசபுரம் சிந்துபூந்துறை தீர்த்தவாரி மண்டபத்தில் வைத்து சுவாமி, அம்பாள் தைப்பூசத் தீர்த்தவாரி நடக்கிறது. விழாவை முன்னிட்டு பிப்.8ம் தேதி பகல் 12.30 மணிக்கு சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அகஸ்தியர், தாமிரபரணி, குங்குளிய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர், அஸ்திரதேவி ஆகிய மூர்த்திகளுடன் புறப்பட்டு சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ்ப்பாலம் வழியாக கைலாசபுரம் சிந்துபூந்துறை தைப்பூச மண்டபம் வருகின்றனர்.

அங்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி விழா முடிந்து விசேஷ தீபாராதனை நடக்கிறது. பின்னர் மாலை 6 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கோயில் வந்து சேர்கின்றனர். 9ம் தேதியன்று செளந்திரசபா மண்டபத்தில் வைத்து பிருங்கி ரத முனி சிரேஷ்டர்களுக்கு சுவாமி திருநடனம் காட்டியருளல், செளந்திர சபா ஸ்ரீ நடராஜர் திருநடனக் காட்சியும் நடக்கிறது. 10ம் தேதி சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சந்திர புஷ்கரணி என்ற வெளி தெப்பக்குளத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் இரவு 7 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy