ஒன்றிய தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. 7 இடங்களில் வெற்றி

ஒன்றிய தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. 7 இடங்களில் வெற்றி

ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு நடந்த மறைமுகத் தேர்தலில் ஒன்றிய தலைவர் பதவியிடத்தில் அ.தி.மு.க. 7 இடங்களை பிடித்த நிலையில், துணைத் தலைவர் பதவி இடத்தில் தி.மு.க. 10 இடங்களையும் பிடித்துள்ளது.

சென்னை:

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த 11-ந்தேதி நடைபெற்ற மறைமுகத் தேர்தல்களின்போது பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 30-ந்தேதி (நேற்று) நடத்திட அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மறைமுகத் தேர்தலில், ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியிடம் மற்றும் ஒரு மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவியிடம் ஆகியவற்றுக்கு போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வருகை தராத காரணத்தால் மறைமுகத் தேர்தல் நடைபெறவில்லை.

ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கான 26 பதவியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த மறைமுகத் தேர்தலில், நீதிமன்ற உத்தரவின் காரணமாக ஒரு இடத்திற்கும், போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வருகை தராத காரணத்தால் 9 பதவியிடங்களுக்கும் சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக 2 பதவியிடங்களுக்கும் மறைமுகத் தேர்தல் நடைபெறவில்லை.

மீதமுள்ள 14 பதவியிடங்களுக்கு நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் அ.தி.மு.க. 7 இடங்களிலும், தி.மு.க. 4 இடங்களிலும், பா.ம.க. 2 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர்களுக்கான 41 பதவியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த மறைமுகத் தேர்தலில், நீதிமன்ற உத்தரவின் காரணமாக ஒரு இடத்திற்கும், போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வருகை தராத காரணத்தால் 16 பதவியிடங்களுக்கும், சட்டம் – ஒழுங்கு பிரச்சினை காரணமாக 2 பதவியிடங்களுக்கும் மறைமுகத் தேர்தல் நடைபெறவில்லை.

மீதமுள்ள 22 பதவியிடங்களுக்கு நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் அ.தி.மு.க. 5 இடங்களிலும், தி.மு.க. 10 இடங்களிலும், பா.ம.க. ஒரு இடத்திலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், ம.தி.மு.க. ஒரு இடத்திலும், சுயேச்சை வேட்பாளர்கள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan