5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கட்டாயக் கல்வி சட்டத்துக்கு எதிராக உள்ளதே?

5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கட்டாயக் கல்வி சட்டத்துக்கு எதிராக உள்ளதே?

* மறுதேர்விலும் தேர்ச்சி பெறாதவர் நிலை என்ன?
* ஐகோர்ட் கிளை அரசுக்கு சரமாரி கேள்வி

மதுரை: ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்துவதற்கான அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில், 8ம் வகுப்பு வரை பெயிலாகக்கூடாது என கட்டாய கல்விச்சட்டம் கூறும்போது, பொதுத்தேர்வு தொடர்பாக அரசின் நிலை என்ன என்று, ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த வக்கீல் லூயிஸ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வி அளிக்கப்படுகிறது. இந்த சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இதன்படி, 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வௌியிட்டுள்ளது. குழந்தைகளால் பொதுத்தேர்வை எதிர்கொள்ள முடியாது. பயம் கலந்த சூழல் காரணமாக கற்றல் திறன் பாதிக்கும். ஒவ்வொருவரும் கல்வியறிவு ெபற வேண்டியது அவசியம். தேர்ச்சி பெற முடியாத மாணவர்களின் கற்றல் திறன் மட்டுமின்றி, மனரீதியாகவும் பெரும் பாதிப்பு ஏற்படும். இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. எனவே, 5 மற்றும் 8ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தும் அரசாணை சட்டவிரோதம் என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும். இந்த கல்வி ஆண்டில் அரசாணையை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் லஜபதிராய் ஆஜராகி, ‘‘பொதுத்தேர்வில் தோல்வி அடைவோர் 2 மாதத்திற்குள் மறுதேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டும். குழந்தைகளுக்கு மறுதேர்வு என்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இடைநிற்றல் அதிகரிக்கும். சிபிஎஸ்இ கல்வித் திட்டத்தில் இந்த நடைமுறை இல்லை. பல மாநிலங்கள் இதை பின்பற்றவில்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் அவசரமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற முடியாத மாணவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை’’ என்றார். அரசுத் தரப்பில், ‘‘தோல்வி அடைந்த மாணவர்கள் மறுதேர்வுகளின் மூலம் தேர்ச்சி பெற வேண்டும்’’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் வினாத்தாள் வழங்கப்படும் என்றால், விடைத்தாள்கள் எங்கு திருத்தப்படும்? இதற்கு என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது? எதன் அடிப்படையில் தமிழக அரசு இந்த அரசாணையை வெளியிட்டது? கட்டாய கல்வி சட்டம் 14 வயது வரை இலவச கல்வி வழங்க வேண்டும் என்கிறது. ஆனால், கட்டாயக்கல்வி சட்டத்துக்கு எதிராக இந்த பொதுத்தேர்வு முறை உள்ளதே? மறுதேர்விலும் தேர்ச்சி பெறாத குழந்தைகளின் நிலை என்ன? தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு எப்போது தேர்வு நடத்தப்படும்’’ என சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.

அரசுத் தரப்பில், விளக்கம் பெற்று பதில் மனுதாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென கேட்கப்பட்டது. இதையடுத்து மத்திய சட்டத்துறை செயலர், மனிதவள மேம்பாட்டு அமைச்சக சார்பு செயலர், தமிழக பள்ளிகல்வித்துறை முதன்மை செயலர், துவக்கக் கல்வி இயக்குநர், அரசு ேதர்வுகள் இயக்குநர், குழந்தைகள் உரிமைகள் ஆணைய தலைவர் உள்ளிட்டோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப். 19க்கு தள்ளி வைத்தனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy