Press "Enter" to skip to content

Exclusive: எந்த மிரட்டல்களுக்கும் அஞ்சி பின்வாங்க மாட்டேன்… ஒன்இந்தியாவிடம் சரிதாநாயர் திட்டவட்டம்

சென்னை: சோலார் பேனல் முறைகேடு உள்ளிட்ட பல புகார்களில் சிக்கி வழக்குகளை எதிர்கொண்டு வரும் சரிதா நாயர், தான் நடத்தி வரும் சட்டப்போராட்டத்தில் தனக்கு நீதி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார். மேலும், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்டோர் மீதான தனது புகாரை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என அவர் கூறுகிறார்.

இது குறித்து ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியின் விவரம் பின்வருமாறு;

கேள்வி: அடுக்கடுக்கான புகார்கள், வழக்குகள், வாய்தாக்களுக்கு இடையே உங்கள் வாழ்க்கை எப்படி செல்கிறது?

பதில்: கடந்த 7 ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு செல்வதிலேயே பெரும்பாலான நாட்களை கழித்துவிட்டேன். கேரள காங்கிரஸ் தலைவர்கள் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெறுமாறு பல தரப்பில் இருந்தும் அழுத்தங்கள் வரத்தான் செய்கின்றன. நிம்மதியாக இருக்கிறேன் என்று சொல்ல முடியாவிட்டாலும் கடவுள் அருளால் ஓரளவு மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். சிலர் வெளிநாடுகளில் இருந்து கூட நெட் கால்கள் மூலம் அழைத்து குற்றச்சாட்டுகளை திரும்பப்பெறு என மிரட்டல் விடுப்பார்கள். ஆனால் அதற்கெல்லாம் அஞ்சி நான் பின்வாங்கமாட்டேன் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

கேள்வி: மிரட்டல் வருகிறது என்றால் யார் தரப்பில் இருந்து வருகிறது, மிரட்ட வேண்டிய அவசியம்?

பதில்: மிரட்டல் என்றால் காங்கிரஸ் கட்சியில் இருந்து நேரடியாக மிரட்டல் வராது, நான் யார் மீதெல்லாம் புகார் கூறினேனோ அவர்கள் சார்பில் மூன்றாம் நபர்கள் பேசுவார்கள். யார் பேசுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியாத வகையில் நெட் கால்கள் மூலம் அழைத்து மிரட்டுவார்கள். ஒரு சிலர் நேரடியாகவே என்னை சந்தித்து சமரசமாக செல்லுமாறு பேச வந்துள்ளார்கள். ஆனால் நான் தவறு செய்யாத போது எதற்கு அஞ்ச வேண்டும். அதனால் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான புகார்களில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

கேள்வி: இப்போதும் சோலார் பேனல் தொழில் செய்கிறீர்களா? எப்படி அந்த துறைக்குள் வந்தீர்கள்?

பதில்: நான் ஒரு பொறியியல் பட்டதாரி. (Renewable energy) புதுப்பிக்கதக்க சக்தி, மாற்று எரிசக்தி தொடர்பாக டிப்ளமோ பயின்று இருக்கிறேன். அதனால் நான் ஒரு ப்ரோஜக்ட் கன்சல்டன்ட் ஆக இருந்து வருகிறேன். இப்போது காற்றாலை மற்றும் சோலார் பேனல்கள் தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறேன். இதைத்தவிர கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பேப்பர் கப், பேப்பர் பிளேட், தயார் செய்து விற்பனை செய்து வருகிறேன்.

கேள்வி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை எதிர்த்து அமேதியில் போட்டியிட்டது ஏன்?

பதில்: ராகுலை எதிர்த்து போட்டியிடுமாறு என்னிடம் யாரும் கூறவில்லை. அது நான் எடுத்த முடிவு தான். கேரளாவில் சில காங்கிரஸ் தலைவர்கள் செய்த தவறுகள் பற்றி ராகுலுக்கு பலமுறை கடிதம் வாயிலாக தெரியப்படுத்திவிட்டேன். ஆனால், நான் கூறிய புகார்களை ராகுல் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. நீதி கேட்டு ஒரு பெண்ணாகிய நான் பலமுறை கெஞ்சியும் ராகுல் எனது புகார்களை உதாசீனப்படுத்தி வந்தார். இதனால் அவரெல்லாம் பிரதமர் ஆகி நாட்டுக்கு என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்ததால் நான் அமேதியில் போட்டியிட்டேன். வேட்புமனு மட்டுமே தாக்கல் செய்தேன், பிரச்சாரத்திற்கு கூட நான் செல்லவில்லை. ஆனாலும், சுமார் 600 வாக்குகளை நெருக்கி அங்கே வாங்கியிருந்தேன்.

கேள்வி: நீங்க ரவுடிகளை கூட வைத்துக்கொண்டு செயல்படுவதாக புகார் கூறப்படுகிறதே.. உண்மையா?

பதில்: எனக்கு எதற்கு ரவுடிகள் வேண்டும், நான் உண்டு என் வேலை உண்டு என இருந்து வருகிறேன். எனது தம்பிமார்கள் எனக்கு உதவியாக இருக்கிறார்கள். காங்கிரஸ்காரர்கள் வேண்டுமென்றே இது போன்ற புகார்களை பரப்பி வருகின்றனர். நான் ரவுடிகளை வைத்திருப்பதாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை.

கேள்வி: அரசியல் கட்சியில் இணைய இருப்பதாக ஒரு தகவல் உலா வந்தது.. அது உண்மையா எந்த கட்சியில் சேர இருக்கிறீர்கள்?

பதில்: நான் தொழிலதிபராக இருந்து வருவதால், எனக்கு அரசியல் சரியாக இருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் அரசியல் கட்சிகளில் இருந்து அழைப்பு வந்தது உண்மை. பாஜகவில் இருந்து கூட அழைப்பு வந்தது. நான் ஜெயலலிதாவின் தீவிர ஃபேன். அவரது துணிச்சலும், தன்னம்பிக்கையும் என்னை மெய் சிலிர்க்க வைக்கும். ஆகையால் அம்மாவுடைய கட்சி மீதும் எனக்கு தனிப்பற்று உண்டு. சில மாதங்களுக்கு முன்பு அமமுகவில் இருந்து கூட அழைப்பு வந்தது உண்மை தான். ஆனால் நான் அரசியல் கட்சியில் இணைவது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »