வெளி மாநில வரத்து துவங்கியதால் பெரிய வெங்காயம் விலை சரிந்தது

வெளி மாநில வரத்து துவங்கியதால் பெரிய வெங்காயம் விலை சரிந்தது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தற்போது, வெளிமாநிலங்களில் இருந்து பல்லாரி வரத்தால், அதன் விலை சரிய துவங்கியுள்ளது. தற்போது ஒருகிலோ ரூ.38க்கு விற்பனை செய்யப்படுகிறது.  பொள்ளாச்சியில் உள்ள வெங்காய மார்க்கெட்டுக்கு தினமும் டன் கணக்கில் கொண்டுவரப்படும் பல்லாரி(பெரிய வெங்காயம்) மற்றும்  சின்ன வெங்காயம் உள்ளிட்டவை,  வெளியிடங்களுக்கு சில்லரை மற்றும் மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, புனே  உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து, தினமும் டன் கணக்கில் பல்லாரி அதிளவில் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது.  இங்கு கொண்டுவரும் பல்லாரியில் முதல் தரம் மற்றும் இரண்டாம் தரம் என பிரித்து,  சுமார் 65சதவீதம், கேரள மாநில பகுதிக்கு மொத்த விலைக்கு அனுப்பப்படுகிறது.  தமிழகத்தின் பல்வேறு பகுதி மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து, கடந்த 5 மாதங்களுக்கு முன்புவரை  பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு பல்லாரி வரத்து ஓரளவு இருந்தது. இதனால் அந்நேரத்தில் ஒருகிலோ ரூ.25 முதல் ரூ.30வரை விற்பனை செய்யப்பட்டது.

 ஆனால் கடந்த சில மாதங்களாக, வெளிமாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்து தடைபட்டதால் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர ஆரம்பித்தது. கடந்த டிசம்பர் மாதத்தில் ஒருகிலோ பல்லாரி ரூ.130 முதல் ரூ.150வரை என எப்போதும் இல்லாத அளவிற்கு விற்பனையானது.  இதற்கிடையே, வெளி நாடுகளில் இருந்து பல்லாரி வந்ததால் அந்நேரத்தில் ஒருகிலோ பல்லாரி ரூ.100 முதல் ரூ.120ஆக விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் பல மாதத்திற்கு பிறகு, வெளி மாநிலங்களில் இருந்து பல்லாரி வரத்து அதிகரிக்க  துவங்கியுள்ளது. இதனால், பொள்ளாச்சி மார்க்கெட்டில் பெரியவெங்காயம் விலை குறைய துவங்கியது.

 தற்போது,  ஐதராபாத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் எகிப்து உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்தும் பல்லாரி வரத்து அதிகரிப்பால், அதன்விலை கடுமையாக சரிந்தது.  மார்க்கெட்டுக்கு கொண்டுவரும் பல்லாரிகளை தொழிலாளர்கள் தரம்பிரித்து வெளியிடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி மார்க்கெட்டில் நேற்று ஒருகிலோ பல்லாரி ரூ.38முதல் ரூ.50 வரை விற்பனையானது. வரும் மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பல்லாரி அறுவடை தீவிரமடைந்து, அதன் வரத்து அதிகரித்தால் மேலும் விலை சரிய வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy