வீட்டின் மேற்கூரை இடிந்து 2 சிறுவர்கள் பலி: பரமக்குடி அருகே சோகம்

வீட்டின் மேற்கூரை இடிந்து 2 சிறுவர்கள் பலி: பரமக்குடி அருகே சோகம்

பரமக்குடி: பரமக்குடி அருகே நேற்றிரவு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் பலியாகினர். மேலும், சிறுவர்களின் தாயும் படுகாயமடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ளது பொதுவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன்(47). இவரது மனைவி ரேகா (40). இவர்களது மகன்கள் ஜெகதீஸ்வரன் (10), விஷ்வா(8). பாஸ்கரன் சென்னையில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் பிரின்டிங் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.

பொதுவக்குடி பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஜெகதீஸ்வரன் ஐந்தாம் வகுப்பும், இவரது தம்பி விஷ்வா நான்காம் வகுப்பும் படித்து வந்தனர்.  நேற்று பள்ளிக்கு சென்று விட்டு சகோதரர்கள் வீட்டிற்கு திரும்பினர். இரவில் தாய் ரேகாவுடன் சிறுவர்கள் சாப்பிட்டனர். பின்னர் மூன்று பேரும் தூங்கினர். நள்ளிரவு 12 மணியளவில் வீட்டின் மேற்கூரை பயங்கர சத்தத்துடன் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதில் இடிபாடுகளில் சிக்கி சிறுவர்கள் ஜெகதீஸ்வரன், விஷ்வா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். ரேகா பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். உடனே அப்பகுதியினர் தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, காயமடைந்த ரேகாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரமக்குடி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிறுவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக எமனேஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 சிறுவர்கள் பலியான சம்பவம் பரமக்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy