Press "Enter" to skip to content

நீயா –நானா போட்டியா..? மாமியார் – மருமகள் உறவு? அடடே இது தெரியாம போச்சே..!

நீயா –நானா போட்டியா..? மாமியார் – மருமகள் உறவு? அடடே இது தெரியாம போச்சே..! 

தாய் – மகள் உறவுக்கு இணையானது.மாமியார் – மருமகள் உறவு. ஆனால், பெரும்பாலான வீடுகளில் இந்த உறவு இணக்கமாக இருப்பதில்லை என்பதுதானே எதார்த்தம். 

ஓர் இளைஞன் தான் விரும்பும் பெண்ணைத் தன் அம்மாவிடம் அறிமுகம் செய்வதற்காக, வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தான். அவள் தன்னுடன் நான்கு தோழிகளையும் அழைத்து வந்தான். அந்த இளைஞன் தன் அம்மாவிடம், “வீட்டுக்கு வந்திருக்கும் இந்த ஐந்து பெண்களில் யாரை நான் மணக்க விரும்புகிறேன் என்று கண்டுபிடி, பார்க்கலாம் ” என்று வேடிக்கையாகப் புதிர் போட்டான். அம்மாவைக் குழப்புவதற்காக அத்தனை பெண்களிடமும் ஒரே மாதிரியாகச் சிரித்துப் பேசினான். விருந்து முடிந்து பெண்கள் விடைபெற்றுச் சென்றதும், அம்மா அவனிடம், “சிவப்பு டாப்ஸ் அணிந்திருந்த பெண்ணைத்தானே நீ விரும்புகிறாய்?” என்றாள். மகன் திகைத்துப் போய், “அவளிடம் நான் அதிகம் பேசக்கூட இல்லையே, எப்படி அம்மா கண்டுபிடித்தாய்?” என்று கேட்டான். சுலபம். அவளைப் பார்த்த கணத்திலேயே ஏனோ அவளை எனக்குப் பிடிக்கவே இல்லை என்றாள் அம்மா. இது இங்கல்ல… அமெரிக்காவில் புழங்கும் நகைச்சுவை. மாமியாரும், மருமகளும் சேர்ந்து வாழாத மேலை நாடுகளிலும் கூட மாமியார், மருமகளுக்கு இடையில் இனிமையான உறவு இருப்பதில்லை.

பெரும்பாலான வீடுகளில் மாமியாரும் மருமகளும் நீயா ….நானா என எலியும், பூனையுமாக தான் இருக்கிறார்கள். மாமனார்களுடன் பெண்களுக்கு அவ்வளவு கருத்து வேறுபாடு வருவதில்லை. மாமியார் மருமகளுக்குள் மட்டும்தான்  மகன் / கணவன் தனக்கு மட்டும் சொந்தம் என பார்க்கப்படுவதால் உரிமைப் போராட்டம். 

அதிக நேரம் மருமகளுடன் நெருங்கி பழகும் மாமியாரின் கண்ணுக்கு தான் குறை, நிறைகள் தென்படுகிறது. தனக்குப் பிறகு இந்த குடும்பத்தை ஏற்று பொறுப்பாக கவனித்துக் கொள்ளும் தகுதி மருமகளுக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, புதிய பெண்ணை ஒரு தகுதியுடைய குடும்பத் தலைவியாக்க வேண்டுமே என்ற துடிப்பு அவர்களை ஆட்கொள்ளும் போது அது அதிகாரமாக மாறிவிடுகிறது.  

மகள், மருமகள் இருவர் மீதும் ஒரு பெண் அன்பு காட்டினாலும் தவறுகள் ஏற்படும் போது மகளிடம் நடந்து கொள்ளும் விதத்திலும் மருமகளிடம் நடந்து கொள்ளும் விதத்திலும் நிச்சயம் வேறுபாடு இருக்கிறது. மகளை மன்னிக்கும் மனம் மருமகளை மன்னிக்காது.

இந்திய பெண்களுக்கு மாமியார்-மருமகள் சண்டையை பார்ப்பது போன்றதொரு சுவாரஸ்யம் வேறு எதிலும் இருப்பதில்லை. இந்த மனப்போக்கு தான் தொலைக்காட்சி சீரியல்களின் வெற்றிக்கு காரணம். 

எந்த இக்கட்டான நேரத்திலும் தன் சுயபுத்தியோடு செயல்பட வேண்டுமே தவிர பிறர் சொல்லை கேட்டு தவறாக தடம் மாறக் கூடாது. இது நம் குடும்பம். போர்க்களமல்ல. இதில் யாருக்கு வெற்றி என்பது நம் இலக்கல்ல. மற்றவர்களின் மனநிம்மதியே நம் வெற்றி என்பதை மனதில் கொண்டு இருவரும் செயல்பட வேண்டும்.

வீட்டுக்கு வந்ததும் மகனை மருமகள் கையில் போட்டுக்கொள்வாள் என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் யார் சொன்னாலும், அதை இந்த காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுங்கள். நானும் உனக்கு அம்மாதான். நீயும் எனக்கு இன்னொரு மகள்தான்’ என்று அடிக்கடி மருமகளிடம் சொல்லி பாருங்கள். அவள் தன் அம்மாவை உங்களிடமும் காண்பாள். 

உங்கள் கணவரின் சிறு வயது குறும்புகள், சாதனைகள், மறக்க முடியாத சுவாரஸ்யமான சம்பவங்கள் போன்றவற்றை, மாமியாரிடம் கேளுங்கள். சுவைக்க சுவைக்க ‘மலரும் நினைவுகளை’ பகிர்ந்துக் கொள்வார்கள். மாமியாரோடு உறவாட இது உதவிப் புரியும்.

குடும்ப விஷயங்களை விவாதிக்கும் போது, அவர் கருத்துக்களை கவனித்துக்கேளுங்கள். அவருக்கு நீங்கள் தரும் முக்கியத்துவம் உங்களை அவர் மனதில் சிங்காசனம் போட்டு உட்கார வைக்கும். ஏதாவது பிரச்சனை என்றால், உங்கள் மாமியாரிடம் மனம் விட்டுப் பேசுங்கள், அவர்களது அனுபவம் உங்களது பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும்.

குழந்தைகளை வளர்க்க பார்த்துக் கொள்ளும் வேலைக்காரியைப் போல் நினைக்காமல் அவர்களால் முடியாத அன்று அவர்களுக்கு ஓய்வு கொடுத்து நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். மருமகள்களும் தன் மாமியார் வயதானவர்கள், தன் கணவரையும் மற்ற குழந்தைகளையும் வளர்த்தவர்கள், முதுமையின் படியில் ஏறத் தொடங்கி உள்ள அவருக்கு தோள் கொடுத்து அவரின் பிணியும் மூப்புமான காலகட்டத்தில் அவரை அரவணைத்துச் செல்லுவோம் என எண்ண வேண்டும். பெரியவர்களிடம் ஒரு பழக்கம். அவர்கள் சொன்னதை சொன்னபடி செய்யவேண்டும் என கட்டாயப்படுத்துவது. இதில்தான் காண்ட்ரவர்சியே ஆரம்பிக்கிறது.

நிறைய வீடுகளில் மருமகள் மாமியாரை அம்மா என்று தான் அழைக்கிறார்கள். அம்மா எனும் போது உறவு வலுப்பெறுகிறது என்றாலும் அத்தை என்ற உன்னத உறவு மறைந்து விடுகிறது. மாமியாரை அம்மாவென அழைப்பதை விட, தங்கள் அம்மாவாக நடத்துங்கள்.  

கணவர் என்ற புதிய உறவு கிடைத்திருக்கும் உற்சாகத்தில் காதலில் திளைத்திருக்கும் அதே வேளையில் தான். இதுவரை தனக்கு மட்டுமே உரிமையாயிருந்த, தன் மீது பாசம் பொழிந்த மகன் இன்னொருவளுக்கு சொந்தமாகிறான் என்கிற வருத்தங்கள் உங்களின் மாமியாருக்கு இருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

அன்பு செலுத்துங்கள் கணவரை மட்டுமல்ல.. கணவரையும் கணவரின் குடும்பத்தாரையும்…

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »