செல்லம்பட்டி அருகே அங்கன்வாடிக்குள் புகுந்த பாம்புகள் மீட்பு

செல்லம்பட்டி அருகே அங்கன்வாடிக்குள் புகுந்த பாம்புகள் மீட்பு

உசிலம்பட்டி: செல்லம்பட்டி அருகே அங்கன்வாடிக்குள் புகுந்து பாம்புகள் மீட்கப்பட்டன. இதனால் அங்கவன்வாடிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, செல்லம்பட்டி ஒன்றியத்திலுள்ளது கீழப்பச்சேரி. இந்த கிராமத்திலுள்ள அங்கன்வாடிக்குள் 6 அடி நீளமுள்ள பாம்புகள் புகுந்து விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கன்வாடி ஊழியர்கள், குழந்தைகள் வெளியே ஓடிவந்து விட்டனர்.

தொடர்ந்து அதே ஊரை சேர்ந்த பாண்டீஸ்வரன் என்ற வாலிபர் அழைத்து வரப்பட்டார். பின்னர் அவர் அங்கன்வாடிக்குள் புகுந்த ஒரு சாரைப்பாம்பை மட்டும் பிடித்தார். மற்றொரு பாம்பு பொந்துக்குள் புகுந்து விட்டதால் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் அந்த பாம்பை உயிருடன் பிடித்தனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,‘‘ எலியை விரட்டிப்பிடிக்கவே இந்த பாம்புகள் வந்திருக்கும்’’என்றனர்.

மேலும் மக்கள் கூறுகையில்,‘‘அங்கன்வாடி சுற்றியும் முட்புதராக கிடக்கிறது, அங்கன்வாடி கட்டிடம் முழுவதும் உடைந்தும் கிடக்கிறது. மேலும், கீழே சிந்தி கிடக்கும் அரிசியை எலி திண்பதும், எலியை பிடிக்க பாம்புகள் வருவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் அங்கன்வாடிக் கட்டிடத்தை மராமத்துப்பணி செய்ய வேண்டும்’’என்றனர். பாம்புகள் நடமாட்டத்தால் அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy