16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்

16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்

* தகராறு செய்ததால் 9 மாதத்திற்குபின் புகார்
* கணவர் உட்பட 3 பேர் மீது போக்சோவில் வழக்கு

தர்மபுரி:  தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கொல்லப்பட்டி புது கரம்பூர் பகுதியை சேர்ந்தவர் பழனி-முனியம்மாள் தம்பதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், குடும்ப தகராறு காரணமாக கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால், முனியம்மாள் அவரது அண்ணன் பெருமாளிடம் தனது இரு குழந்தைகளை ஒப்படைத்து விட்டு, வேலைக்காக ஓசூர் சென்று விட்டார். இதனைதொடர்ந்து, முனியம்மாள் சம்மதத்துடன் அவரது 16 வயது மூத்த மகளை பெருமாள் அதே பகுதியை சேர்ந்த முனியப்பன் என்பவருக்கு கடந்தாண்டு, ஏப்.10ம் தேதி திருமணம் செய்து வைத்தார். இந்நிலையில், சிறுமிக்கும், அவரது கணவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி நடந்த சண்டையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதையடுத்து திருமணமாகி 9 மாதத்திற்குப்பின் நேற்று காலை அச்சிறுமி சைல்டு லைன் அமைப்புக்கு போன் செய்து தனக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து விட்டதாக கூறி அழுதுள்ளார்.

இதனையடுத்து, நேற்று அங்கு சென்ற  அதிகாரிகள் சிறுமி உள்பட அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும், இது குறித்து பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், பென்னாகரம் மகளிர் போலீசார் சிறுமியின் கணவன் முனியப்பன், தாய்மாமன் பெருமாள், முனியப்பனின் தந்தை ஆகியோர் மீது போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் 3 பேரும் தலைமறைவாகிவிட்டனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy