தேர்தல் அதிகாரியை  ‘சிக்க’வைத்த துரைமுருகன்4 நிமிட வாசிப்புஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் அதிகளவில் வெற்றிபெற ஸ்டாலினும் ஒரு காரணம் என துரைமுருக…

தேர்தல் அதிகாரியை ‘சிக்க’வைத்த துரைமுருகன்4 நிமிட வாசிப்புஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் அதிகளவில் வெற்றிபெற ஸ்டாலினும் ஒரு காரணம் என துரைமுருக…

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் அதிகளவில் வெற்றிபெற ஸ்டாலினும் ஒரு காரணம் என துரைமுருகன் பேசியுள்ளார்.

ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு நடந்த தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுகவை விட திமுக அதிக இடங்களில் வெற்றிபெற்றது. வாக்கு எண்ணிக்கை சமயத்தில் திமுக வெற்றிபெற்ற பல இடங்களில் அதிகார பலம் காரணமாக ஆளுங்கட்சியான அதிமுக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது என திமுக குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக வாக்கு எண்ணிக்கை நடந்த ஜனவரி 2ஆம் தேதி டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் மாநில தேர்தல் ஆணையத்திற்கு பல முறை சென்று மனு அளித்தனர். ஒரு கட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினே நேரடியாகச் சென்று, தேர்தல் அதிகாரிகளை சந்தித்து, புகார் அளித்தார்.

இந்த நிலையில் இந்த விஷயங்களை நேற்று (ஜனவரி 31) திருச்சி கேர் கல்லூரியில் நடந்த திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் விளக்கமாகப் பேசினார்.

மாநாட்டில் ஸ்டாலினுக்கு முன்னதாக பேசிய துரைமுருகன், “உள்ளாட்சித் தேர்தல் முடிவின்போது அனைத்து இடங்களிலும் திமுகவே வெற்றிபெற்றுவிடும் என்று கருதிய அமைச்சர்கள், தங்களது அதிகாரத்தை பயன்படுத்தினார்கள். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள்ளே நுழைந்தார்கள். திமுகவின் வெற்றியை அறிவிக்கவே சில அதிகாரிகள் மறுத்தனர். அறிவித்தாலும் வெற்றிச் சான்றிதழை அளிக்க மறுத்தார்கள்.

இதுதொடர்பாக தமிழகத்தின் எட்டுத் திக்கிலும் இருந்து எங்களுக்கு செய்திகள் வருகிறது. ஸ்டாலின் தலைமைக் கழகத்தில் அமர்ந்திருந்தார். இதுபோன்ற செய்திகள் வர வர அவருடைய முகம் சிவக்கிறது. கோபம் வருகிறது. தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்று ஆலோசனை சொல்லப்படுகிறது. யாரையாவது அனுப்பி வைக்கலாம் என்று சொன்னவுடன், என்னுடைய தோழர்கள் பெற்ற வெற்றியை அறிவிக்க மறுக்கிறார்கள் எனும்போது, நானே ஆணையத்திற்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினார் ஸ்டாலின்” என்று சொன்னவர்,

“அந்த இரவு நேரத்தில் தேர்தல் அதிகாரியை சந்தித்து அவர் கேட்ட விதம், பேசிய திடத்தைப் பார்த்து அதிகாரிகளே அஞ்சினார்கள். கடைசியாக அதிகாரியைப் பார்த்து, “அதிகாரி அவர்களே இனி நான் வந்து பார்க்க மாட்டேன். என்னை நீ வந்து பார்க்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கிக் காட்டுவேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் ஸ்டாலின். அந்த அதிகாரியை நான் நீண்ட நாட்களாக அறிவேன். என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டு, ‘தலைவரிடம் சொல்லுங்கள், என்னால் முடிந்ததைச் செய்கிறேன்’ என்று சொன்னார். அன்று இரவு மட்டும் ஸ்டாலின் தூங்கியிருந்தால் இன்று இத்தனை பேர் வந்திருக்க முடியாது. அனைத்திலும் அவர்களே வெற்றிபெற்றிருப்பார்கள். உங்கள் ஒவ்வொருவரின் வெற்றியிலும் ஸ்டாலினின் உழைப்பு உள்ளது” என்று பேசிமுடித்தார்.

Source: Minambalam.com

Author Image
murugan