வரவு செலவுத் திட்டத்தில் ஆதிச்சநல்லூரை அறிவித்துவிட்டு கீழடியைப் புறக்கணித்த மத்திய அரசு.. தமிழக எம்பிக்கள் கோஷம்

வரவு செலவுத் திட்டத்தில் ஆதிச்சநல்லூரை அறிவித்துவிட்டு கீழடியைப் புறக்கணித்த மத்திய அரசு.. தமிழக எம்பிக்கள் கோஷம்

டெல்லி: தமிழகத்தில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பதாக அறிவித்துவிட்டு கீழடியை புறக்கணித்ததால் நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பத்தில் தமிழக எம்பிக்கள் ஈடுபட்டனர்.

2020-2021-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது உரையை தொடங்கினார்.

அப்போது அவர் கூறுகையில் இந்தியாவில் 5 இடங்களில் தொல்லியல்துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். அதில் ஹரியானாவில் ராக்கிகர்ஹி, உ.பியில் ஹஸ்தினாபூர், அஸ்ஸாமில் சிவ்சாகர், குஜராத்தில் தோலாவிரா, தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் ஆகிய 5 இடங்களில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றார்.

அப்போது கீழடியை மத்திய அரசு புறக்கணிப்பதாக தமிழக எம்பிக்கள் கோஷமிட்டனர். கீழடி தொல்லியல் துறை அகழ்வாராய்வு குறித்து மத்திய அரசு அந்த அளவுக்கு அக்கறை கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகளிடம் உள்ளது.

அங்கு அகழாய்வு பணியில் ஈடுபட்டிருந்த அமர்நாத் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதை தமிழகம் கண்டித்தது. அது போல் அகழாய்வு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்வதிலும் மத்திய அரசு சுணக்கம் காட்டி வருவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

கீழடி அகழாய்வு மூலம் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முன்னர் தமிழ் கலாச்சாரம் உருவானது தெரியவந்தது. 3000 ஆண்டுகள் பழமையானது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது. ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வு கீழடியே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: OneIndia

Author Image
vikram