மதுரை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேறுவது எப்போது?… 8 ஆண்டாக கிடப்பில் கிடக்கிறது

மதுரை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேறுவது எப்போது?… 8 ஆண்டாக கிடப்பில் கிடக்கிறது

மதுரை:  புராதன சிறப்பு மிகுந்த மதுரை மாநகரில், 148 ச.கி.மீ. பரப்பளவில் சுமார் 20 லட்சம் பொதுமக்கள் வாழ்கின்றனர். மாநகர் எல்லையை தாண்டி திருமங்கலம், மேலூர், பெருங்குடி, நாகமலைபுதுக்கோட்டை வரை நகர்பகுதி விரிவடைந்து வருகிறது. பன்னாட்டு விமான நிலையம், ஐகோர்ட் கிளை, ஐ.டி.பூங்கா அமைந்துள்ளதால் நகரம் வளர்ந்து கொண்டே போகிறது. மறுபுறம் வாகனங்களின் எண்ணிக்கை புற்றீசலாக பெருகுகிறது. இதன் விளைவு மதுரை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் 5 ஆண்டுகளில் நெருக்கடியை தாங்க முடியாத நிலை ஏற்படும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கு தீர்வாக சென்னையை போல் மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என 2012ல் தமிழக அரசு அறிவித்தது. 8 ஆண்டுகளாகியும் இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. எப்போது நிறைவேறும்? என்ற கேள்வி ரயில் போல் நீண்டு கொண்டே போகிறது.

 மதுரையில் மெட்ரோ ரயில் பாதை திருமங்கலத்தில் தொடங்கி, எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், பெரியார் பஸ்ஸ்டாண்ட், ரயில் நிலையம், யானைக்கல், கோரிப்பாளையம், தல்லாகுளம், மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட்,  ஐகோர்ட் கிளை வழியாக மேலூர் வரை அமைக்க வாய்ப்புள்ளதாக பொறியியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். தற்போதுள்ள அகன்ற வீதிகளில் மேம்பாலம் கட்டி அதன் மேல்தளத்திலும், தேவையான இடங்களில் சுரங்கப்பாதையிலும் தண்டவாளம் அமைத்து மெட்ரோ ரயில் இயக்க முடியும். இதனை போக்குவரத்து வல்லுனர்கள் யோசனையாக அரசுக்கு அளித்துள்ளனர். இது குறித்து போக்குவரத்து ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மதுரைக்கு தொழில், வர்த்தகம், வேலை வாய்ப்புக்காக வெளியூர் மக்கள் தினமும் 4 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து குவிகிறார்கள்.

மாநகரில் தற்போதுள்ள வீதிகளை விஸ்தரிக்க வாய்ப்பில்லை. முக்கிய வீதிகள் அனைத்தும் ஒருவழி பாதையாகி விட்டன. ஆனாலும், போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறுகிறது. இதிலிருந்து மீள மெட்ரோ ரயில் அவசியமாகிறது. மதுரை ‘ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால், மெட்ரோ ரயில் கனவு கலைந்து விடாமல் நிஜமாக வேண்டும். பிப்ரவரி அல்லது மார்ச்சில் தாக்கலாகும் தமிழக அரசின் பட்ஜெட்டில் மெட்ரோ ரயில் திட்ட அறிவிப்பு வெளியாகுமா? என்பதே மதுரை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்..

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy