திருச்சுழி அருகே தமிழ்பாடியில் ஆமை வேகத்தில் நடைபெறும் அரசுப்பள்ளியின் கட்டிட பணி

திருச்சுழி அருகே தமிழ்பாடியில் ஆமை வேகத்தில் நடைபெறும் அரசுப்பள்ளியின் கட்டிட பணி

திருச்சுழி: திருச்சுழி அருகே அரசுப் பள்ளியன் கட்டிட பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருச்சுழி அருகே உள்ள தமிழ்பாடியில் அரசு மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தமிழ்பாடி, கரிசல்குளம், சாமிநத்தம், பனையூர் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்தும் சுமார் 650க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்ப போதிய இருக்கை வசதியோ வகுப்பறை கட்டிடங்களோ இல்லாததால் மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்க ஆசிரியர்களால் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வந்தனர். இந்நிலையில் மாணவர்கள் சேர்க்கைக்கு தகுந்தாற்போல் வகுப்பறை கட்டிடங்களை விரிவுபடுத்த வேண்டுமென மாணவ, மாணவிகள் மற்றும் கிராம மக்கள் சார்பாக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை தொடர்ந்து கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு நபார்டு திட்டத்தின் கீழ் சுமார் 1 கோடியே 59 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை கட்ட அனுமதியளித்தது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட புதிய கட்டிட கட்டுமானப் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால், வகுப்பறை கட்டிட வசதியில்லாமல் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மரத்தடி நிழலில் கல்வி கற்பிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் கல்வி கற்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் மாணவர்கள் திறந்தவெளியில் அமர்ந்து படிக்க கூட வழியில்லாமல் சிறிய அளவில் மழை பெய்தால் கூட பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலை உள்ளதாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வட்டாரத்தினர் கவலையுடன் தெரிவித்தனர்.

இதனால் மாணவர்களின் எதிர்கால கல்வி பயிலும் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே உடனடியாக இது சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறையும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு புதிய கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணியை விரைந்து முடிக்கவும் மாணவர்களின் எதிர்கால கல்வியை உறுதிப்படுத்தவும் மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், எங்கள் ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருவதால் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான மாணவர்கள் தமிழ்பாடி அரசு பள்ளிக்கு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் வகுப்பறை கட்டிடம் பொதுமானதாக இல்லை. இதுசம்மந்தமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததன்பேரில் 2016 ஆண்டு புதிதாக கூடுதல் கட்டிம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு கட்டிட பணிகள் மெதுவாக நடைபெற்று வருகிறது. இதுசம்மந்தாக பலமுறை புகார் தெரிவித்தும் அதற்கான நடவடிக்கை இல்லை, இதே நிலை நீடித்தால் தங்களது குழந்தைகளை பள்ளி அனுப்பமால் புறக்கணிக்க போவதாக கூறினர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy