அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைக்கு கட்டாய வசூல்: வேளாண் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைக்கு கட்டாய வசூல்: வேளாண் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை நெல்லுக்கு விவசாயிகளிடமிருந்து 30 முதல் 40 ரூபாய்  வரை வசூலிக்கின்றனர். இந்த தொகை யாருக்கு செல்கிறது என தெரியவில்லை விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.  ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.மாவட்ட  வருவாய் அலுவலர் கவிதா தலைமை தாங்கினார். கூட்டத்தில், பல்வேறு விவசாய  சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசியதாவது:
 ஈரோடு  மாவட்டத்தில் தென்னை மரங்களை வெள்ளை ஈக்கள் தாக்கி வருகிறது. இதற்கான  மஞ்சள் ஒட்டுண்ணி அட்டையை தனியாரிடம் வாங்கும்போது ஒரு பாக்கெட் 900  ரூபாய்க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இந்த மஞ்சள்  ஒட்டுண்ணி அட்டைகளை வைத்தாலும் வெள்ளை ஈக்கள் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதுதொடர்பாக, கிராமப்புற விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த  வேண்டும்.  ஆந்திர மாநிலத்தில் விவசாயிகளிடமிருந்து ஒரு குவிண்டால்  மஞ்சள் 6,835 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், தரத்தில்  முதலிடத்தில் உள்ள ஈரோடு மஞ்சளுக்கு நல்ல விலை இல்லை. குறிப்பாக, மஞ்சள்  குவிண்டாலுக்கு ஆதார விலையாக 8 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும்.  

 ஈரோடு மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள்  திறக்கப்பட்டுள்ளது. இங்கு வியாபாரிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.  40 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டைக்கு விவசாயிகளிடமிருந்து 30 முதல் 40 ரூபாய்  வரை வசூலிக்கின்றனர். இந்த தொகை யாருக்கு செல்கிறது என தெரியவில்லை. தமிழக  அரசு நெல் கொள்முதல் நிலையங்களை முறையாக கண்காணித்து முறைகேடு நடைபெறாமல்  கண்காணிக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு  முன்னுரிமை கொடுக்க வேண்டும்.  தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ்  சித்தோட்டில் இருந்து சத்தியமங்கலம் வரை 105 கி.மீட்டருக்கு  நான்குவழிச்சாலைகள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, விவசாய நிலங்களில் 110  அடியும், நகர்ப்புறத்தில் 80 அடியும் நிலம் எடுக்க முடிவு செய்துள்ளனர்.  அதன்படி, 115 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு  பாதிப்பு ஏற்படும். இதுதொடர்பாக, ஆய்வு கூட்டத்தை நடத்த வேண்டும்.   பவானிசாகரில் இருந்து  சத்தியமங்கலம் வரை பகுத்தம்பாளையம், இரங்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில்  பட்டு நெசவு தொழில் செய்பவர்கள், சாயநீரை நேரடியாக பவானி ஆற்றில் திறந்து  விடுகின்றனர். இதனால், பவானி ஆறு மாசடைந்து வருகிறது. இதுதொடர்பாக,  மாசுக்கட்டுபபாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 பவானி  ஆற்றில் 10 இடங்களில் தடுப்பணை கட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த  தடுப்பணை ஒன்றரை அடி உயரம் தான் இருக்கும். இதனால், விவசாயிகளுக்கு பயன்  இல்லாமல் போய் விடும். எனவே, 10 அடி உயரத்திற்கு தடுப்பணைகளை கதவணைகளாக  கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பிற்கு 5 ஆயிரம்  ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் பேசினர்.  இந்த  கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநர் பிரேமலதா, விவசாயிகள் சங்க  நிர்வாகிகள் பெரியசாமி, வேலாயுதம், சுபி.தளபதி, சுதந்திரராசு, முனுசாமி,  குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

`வெட்டி ஆபீசர்’ பேச்சால் சலசலப்பு
கலெக்டர்  அலுவலகத்தில் நடந்த வேளாண் கூட்டத்தில் தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள்  சங்க மாநில தலைவர் சுதந்திரராசு பேசுகையில்,`கிராமப்புறங்களில்  வி.ஏ.ஓ.க்கள் யாரும் அலுவலகத்தில் இருப்பதில்லை. வி.ஓ., என்றாலே வெட்டி  ஆபீசர்களாக உள்ளனர் என பேசினார். அப்போது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சைபுதின் எதிர்ப்பு தெரிவித்தார்.  கிராம நிர்வாக அலுவலர்களை தரக்குறைவாக பேசக்கூடாது. மைக் கிடைக்கிறது  என்பதற்காக எது வேண்டுமானலும் பேசக்கூடாது. எங்களுக்கும் பேச தெரியும் என  சைபுதின் பேசினார்.

 இதைத்தொடர்ந்து விவசாயிகள் சிலரும் சேர்ந்து எந்த  வி.ஏ.ஓ.வும் காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருப்பதில்லை. அவர் கூறியதில்  என்ன தவறு இருக்கிறது என வாக்குவாதம் செய்தனர். இதனால், நல அலுவலர்  சைபுதினுக்கும், விவசாய சங்க நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.  மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா இருதரப்பையும் சமாதானம் செய்து வைத்தார்.  இதனால், கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy