களக்காடு அருகே ஒற்றை யானை மீண்டும் அட்டகாசம்: பனைமரத்தை சாய்த்தது

களக்காடு அருகே ஒற்றை யானை மீண்டும் அட்டகாசம்: பனைமரத்தை சாய்த்தது

களக்காடு: களக்காடு அருகே ஒற்றை காட்டு யானை பனை மரத்தை சாய்த்து மீண்டும் அட்டகாசம் செய்ததால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் மலையடிவார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஒற்றை காட்டு யானை நடமாட்டம் காணப்படுகிறது. பகல் நேரங்களில் மலையடிவார புதர்களில் தஞ்சமடையும் யானை இரவில் விளைநிலங்களுக்குள் புகுந்து தென்னை, பனை மரங்களை சாய்த்து வருகிறது.இந்நிலையில் நேற்று இரவில் வனப்பகுதியில் இருந்து வெளிவந்த ஒற்றை காட்டு யானை சத்திரங்காடு விளைநிலங்களுக்குள் சுற்றி திரிந்தது.

பின்னர் அங்குள்ள சந்திரசேகரன் (55) என்பவருக்கு சொந்தமான விளைநிலத்தில் புகுந்து அங்கிருந்த பனை மரத்தை சாய்த்து அதன் குருத்துகளை தின்றுள்ளது. இன்று காலை அங்கு சென்ற விவசாயிகள் யானை பனை மரத்தை சாய்த்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தற்போது பதநீர் சீசன் தொடங்க உள்ளதால் விவசாயிகள் பனை மரங்களில் ஏறி பாலைகளை சீவும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் யானை அட்டகாசம் செய்து வருவதால் அவர்கள் அச்சமடைந்துள்ளனர்.கடந்த 2 மாதங்களுக்கு முன்பும் சந்திரசேகரருக்கு சொந்தமான 3 பனைகளை யானை சாய்த்தது குறிப்பிடத்தக்கது. எனவே அட்டகாசம் செய்து வரும் யானையை விரட்டவும், யானை நாசம் செய்த பனை, தென்னைகளுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy