பங்கு கொடுக்காததால் எஸ்.ஐ. மீது ஏட்டுகள் கடுப்பு

பங்கு கொடுக்காததால் எஸ்.ஐ. மீது ஏட்டுகள் கடுப்பு

மாங்கனி மாவட்டத்தில் சங்ககிரி ஸ்டேஷனில், சந்து கடை மது வியாபாரம், 3ம் நம்பர் லாட்டரியில் காக்கிகள் கல்லா கட்டி வந்தாங்களாம். சமீபத்தில் அந்த ஸ்டேஷனுக்கு மாறுதலாகி வந்த எஸ்ஐ, இனி எல்லா வசூலும் தனக்கும், தனக்கு மேல் உள்ள அதிகாரிக்கும் மட்டும் தான் என கறாராக கூறிவிட்டாராம். அதிலும், யாருக்கும் பங்கு தர முடியாதுன்னு வெளிப்படையாக  சொல்லிட்டதால், ஏட்டுகள் உள்பட இதர காக்கிகள் எல்லாம் கலங்கி போய் நிற்கிறாங்களாம். ஒருபடி மேலே சென்று, அந்த எஸ்ஐ மேல் புகார்களை தட்டிவிடவும் தொடங்கிட்டாங்க. இதனால் மாதந்தோறும் லகரங்களில் கை நிறைக்கும் அந்த எஸ்ஐ, கலக்கத்தில் இருக்காராம். எப்படியும் விரைவில் அந்த எஸ்ஐக்கு டாட்டா காட்டிவிடலாம் என்ற நம்பிக்கையிலும் சில காக்கிகள் கையை உயர்த்தி இருக்காங்க என்பது கூடுதல் தகவல்.

கோர்ட்டுக்கு போனால் பத்தாயிரம், கண்டுக்கிட்டா வெறும் 2 ஆயிரம்…!
கோவை மாநகரில் போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே நின்றுகொண்டு வாகன சோதனை நடத்தி, மது போதையில் வாகனம் ஓட்டும் நபர்களை பிடித்து அபராதம் விதிக்கின்றனர். ஒவ்வொரு மாதத்திற்கும் டார்க்கெட் நிர்ணயித்து, அதற்கு தகுந்தவாறு அபராதம் விதிக்கின்றனர். விவகாரம் பேசும் நபர்களிடம் அதிகம் பேசாமல், ரசீது கிழித்துக்கொடுத்து, கோர்ட்டில் பணம் செலுத்திவிட்டு, வாகனத்தை எடுத்துக்கொள்ளும்படி கறாராக கூறிவிடுகின்றனர். கொஞ்சம் நெழியும் நபர்களை தனியாக நிறுத்தி, அவர்களிடம் பேரம் பேசுகின்றனர். பைக் மற்றும் காரில் குடிபோதையில் வருபவர்களிடம் கோர்ட்டுக்கு சென்றால் ₹10 ஆயிரம், என்னை கவனித்தால் ₹2 ஆயிரம் என பேரம் பேசுகின்றனர். ஆளுக்கு தகுந்தவாறு ₹2 ஆயிரம் முதல் ₹5 ஆயிரம் வரை கறந்து விடுகின்றனர். அதிலும் ஆடி, பென்ஸ், பிஎம்டபிள்யூ என சொகுசு கார்களில் குடிபோதையில் வரும் ஆசாமிகளிடம் ₹7 ஆயிரம் வரை ஆட்டையை போடுகின்றனர். கோர்ட்டுக்கு சென்றால் வீண் அலைச்சல், கவுரவ குறைச்சல் என கருதி, அவர்களும் பணத்தை கொடுத்துவிட்டு நகர்ந்து விடுகின்றனர். ஒரு குறிப்பிட்ட எஸ்.ஐ. தலைமையில் இந்த வசூல் வேட்டை நடக்கிறது. பணி முடித்து செல்லும்போது, மொத்த தொகையை தங்களுக்குள் பங்கு பிரித்துக்கொள்கின்றனர். இதுதவிர, இரவுப்பணிக்கு வரும் பல சட்டம்-ஒழுங்கு போலீசார், காலையில் வீடு திரும்பும்போது, சில ஆயிரங்களுடன் உற்சாகமாக செல்கின்றனர்.

எங்கிட்ட சிக்கினால்  பாத்ரூம் ட்ரீட்மெண்ட்தான் சத்தியம் செய்யும் இன்ஸ்…
மலைக்கோட்டை மாநகரில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் பட்டப்பகலில் கல்லூரி பேராசிரியை ஆம்புலன்ஸ் வாகனத்தில் கடத்தப்பட்டார். அவர் கடத்தப்பட்ட 5 மணி நேரத்தில் போலீசார் அவரை மீட்டனர். இந்த வழக்கில் 4பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியாக அதிமுக பகுதி செயலாளர் வணக்கம் சோமு என்பவர் மட்டும் தற்போது வரை தலைமறைவாக உள்ளார். கேரளா, டெல்லி என சுற்றும் அவரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். தற்போது வணக்கம் சோமு ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தலைமறைவாக உள்ள இடம் பற்றி தெரிந்தும் போலீசாரால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இதனால் கடும் கோபத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் சண்முகமானவர், சோமு சிக்கினால் பாத்ரூம் ட்ரீட்மெண்ட் தான் என சத்தியம் செய்கிறார். சிறுத்தை சிக்குமா என சக நலம் விரும்பிகள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

மணல் கடத்தல் ஆசாமிகளை புலம்ப வைத்த எஸ்ஐ
வேலூர் மாவட்டம் காட்பாடி சப் டிவிசனுக்கு உட்பட்ட திருவலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த எஸ்.ஐயை கடந்த மாதம் சத்துவாச்சாரிக்கு பணியிட மாற்றம் செய்தனர். அவரது இடத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த எஸ்.ஐ பொறுப்பேற்றுக் கொண்டார்.இவர் பொறுப்பேற்ற உடனேயே ஏரியாவில் வசூல் வேட்டையில் இறங்கி விட்டாராம். குறிப்பாக காவல்நிலையத்தில் பணியாற்றும் போலீசார் எவரும் தனித்தனியே சென்று மணல் கடத்தல்காரர்களிடம் வசூல் செய்யக் கூடாது எனவும், அதுபற்றி தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தாராம்.அதோடு மணல் கடத்தல் தொழிலில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொரு வாரமும் தன்னிடம் நேரிலேயே வந்து மாமூலை கட்ட வேண்டும் என்றும் உத்தரவிட்டாராம். இதனால் முணுமுணுத்த சக போலீசாரிடம் வரும் வசூலில், தானே பங்கு பிரித்து வழங்குவதாக சமாதானம் செய்துள்ளார். தற்போது ஒவ்வொரு வாரமும் வண்டி ஒன்றுக்கு ₹2 ஆயிரம் என 50 மாட்டு வண்டிக்காரர்களிடம் மொத்தம் ₹1 லட்சம் பார்த்து வருகிறாராம்.

இதுதொடர்பாக மணல் கடத்தல் தடுப்பு தனிப்பிரிவு போலீசுக்கு தெரிய வந்தவுடன், அவர்கள் திருவலத்தில் ரோந்து பணியில் தீவிரம் காட்டி வருகிறார்களாம். இதுபற்றி முன்கூட்டியே அறிந்த எஸ்ஐ, ஆற்றில் மணல் அள்ளுவதை சில நாட்களுக்கு நிறுத்தி வைக்குமாறு மாட்டு வண்டிக்காரர்களிடம் அறிவுறுத்தியதுடன், கடந்த 2 வாரங்களாக வசூல் செய்த பணத்தை ஸ்வாகா செய்து விட்டாராம். இதனால் முன்கூட்டியே பணத்தை கொடுத்த மணல் கடத்தல் ஆசாமிகள், தொழில் செய்ய முடியாத நிலையில் புலம்பி தீர்த்து வருகிறார்களாம்.இந்த நிலையில் ஏற்கனவே இங்கிருந்து சத்துவாச்சாரிக்கு பணியிட மாற்றம் பெற்று சென்ற எஸ்ஐ மீண்டும் திருவலத்துக்கு மாற்றப்பட்டாராம். ஆனால் அவரை இங்கு பொறுப்பேற்க விடாமல், தனது செல்வாக்கை பயன்படுத்தி இங்கேயே கொட்டமடிக்க திட்டமிட்டு வருகிறாராம் இப்போதுள்ள எஸ்ஐ.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy