கொலைகார நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கொரோனா

கொலைகார நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கொரோனா

* காற்று வாங்கினாலே கதை முடிந்தது
* சின்னாபின்னமாகுது சீன தேசம்
* வீட்டுச்சிறையில் மக்கள் தவிப்பு

மதுரை:  கிழக்காசிய நாடான சீனா, உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட, மிகப்பெரிய நாடுகளுள் ஒன்றாக விளங்குகிறது. பழங்கால நாகரீகம், சீனப்பெருஞ்சுவர் உள்ளிட்ட வரலாற்று பெருமைகள் கொண்ட நாடான சீனா, கடந்த டிசம்பர் மாத இறுதியில் இருந்து தனது இயல்பு நிலையை மெல்ல… மெல்ல இழக்கத் தொடங்கியிருந்தது. ஆம்… அப்போதுதான் சீனாவின், ஹூபெய் மாகாணம், வுகான் நகரில் ஒருவர் கடுமையான காய்ச்சல், தொடர் இருமல், மூச்சுத்திணறலோடு அனுமதிக்கப்படுகிறார். அவரது உடல்நிலையை பரிசோதித்தபோது ஒரு கொடூரமான வைரஸ் பாதிப்பிற்குள்ளானது தெரிந்து டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் அவர் இறந்து விடுகிறார். பின்னர் இதே வைரஸ் பாதிப்போடு வந்த பலர் இறந்து விடுகின்றனர். இறப்பு எண்ணிக்கை தாண்ட, தாண்ட முதலில் மவுனம் காத்து வந்த சீன அரசு, திடீரென மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறது. ‘கொரோனா’ எனப்படும் 2019-nCoV என்ற வைரஸ் பாதிப்பு பரவுவதாகவும், இது காற்றின் மூலம் வேகமாக பரவுவதாகவும், வீட்டை விட்டு யாரும் வெளியேற வேண்டாம்; பாதுகாப்பாக இருக்கும்படியும் எச்சரித்தது. அதற்குள் கொரோனா பாதிப்பில் 25க்கும் மேற்பட்டோர் இறக்கத் தொடங்கியிருந்தனர். சீனாவில் ஆண்டுதோறும் ஜன. 25ம் தேதி அந்நாட்டில் கொண்டாடப்படும் புத்தாண்டுக்காக, வசந்த கால விடுமுறை விடப்படுவது வழக்கம். இம்முறையும் அதே போல வசந்த கால விடுமுறை, பள்ளி, கல்லூரிகளுக்கு தேர்வு விடுமுறை விடப்பட்டிருந்தது. ஆனால், ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பால், புத்தாண்டை மறந்து, உயிர் பிழைத்தால் போதும் என்று வீட்டை அடைத்துக்கொண்டு சீன மக்கள் இருக்கத் தொடங்கி விட்டனர். வெளியே சென்றாலும் மாஸ்க் அணிந்தே செல்கின்றனர். நண்பர்கள், உறவினர்களை பார்த்தால் கூட பேசுவதில்லை.

எப்படி பரவியது :
சீனாவின் வுகான் நகரில் மிகப்பெரிய வன உயிரின சந்தை உள்ளது. இந்த சந்தையில் பறவைகள், விலங்குகள் உயிருடனும், பதப்படுத்தப்பட்ட விலங்குகள் இறைச்சியும் கிடைக்கிறது. இந்த சந்தையில் வவ்வாலை விழுங்கிய பாம்பின் மூலமாகத்தான் கொரோனா வைரஸ் பரவியதாக முதல்கட்ட ஆராய்ச்சியில் தெரிய வந்தது. இதனையடுத்து இந்த சந்தையை கிருமி நாசினியை கொண்டு, தூய்மைப்படுத்தி மூடி விட்டனர். வுகான் நகரில் இறைச்சிக்கடைகளும் மூடப்பட்டன. அந்நகரை சேர்ந்த யாரையும் வெளியேற அனுமதிக்கவில்லை. தரை வழி, வான் வழி போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மினாலோ, காறி உமிழ்ந்தாலோ அதன் மூலம் மற்றவருக்கு எளிதில் இந்த வைரஸ் தொற்றி விடும். எனவே, சீனாவில் பெரும்பாலான வீடுகளில் மக்கள் வெளியே செல்ல முடியாமல் முடங்கி உள்ளனர். வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. அங்கு தங்கி மருத்துவம் உள்ளிட்ட படிப்புகள் படித்து வரும் 50க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள், சொந்த நாட்டுக்கு வர முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால்,  தொடர் காய்ச்சல், தலைவலி, கடும் இருமல், மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு ஏற்படும். தொடர்ந்து, சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மரணம் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இதில் இருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது. எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்கின்றனர் மருத்துவர்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி மருந்தே இதுவரை இந்நோய்க்கு சிகிச்சைக்காக அளிக்கப்படுகிறது. எந்த தடுப்பூசியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மிகப்பெரிய மருத்துவமனையை ஒரே வாரத்தில் உருவாக்கி உள்ளது சீன அரசு.கடந்த 2 மாதங்களில் சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற சுற்றுலாப்பயணிகள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மற்ற நாடுகளும் தங்கள் நாட்டு மக்கள் சீனாவுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளன. தொழில்நுட்பரீதியாக வளர்ச்சி அடைந்த சீன நாடு, இந்த பாதிப்பில் இருந்து மீள 1, 2 மாதங்கள் ஆகலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரை 5 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 150க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். குணமடைந்து நூற்றுக்கணக்கானோர் நலமுடன் சென்றுள்ளனர்.மேலும் 5 ஆயிரம் பேர் பாதிக்கப்படலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. அதற்குள் இந்த வைரசை கட்டுப்படுத்துவதற்கான தீவிர முயற்சியில் சீன அரசு இறங்கி உள்ளது.கடந்த 2002ல் சார்ஸ் வைரஸ் பாதிப்பு 7 மாதங்களில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது தொழில்நுட்பங்கள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளதால், இம்முறையும் விரைவாக இப்பாதிப்பில் இருந்து சீன நாடு மீள வேண்டுமென்பதே உலக மக்களின் விருப்பமாகும்.

கொரோனா…
கடந்த சில நாட்களாக சீன நாட்டை உலுக்கும், உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும், வலைத்தளங்களால் அதிகம் தேடப்படுகிற ஒரு கொடூர வைரஸ் நோய். இதுவரை நூற்றுக்கணக்கானோரை பலி வாங்கிய இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட சீன மக்கள், வீட்டிலேயே சிறைப்பட்டது போல பரிதவிக்கின்றனர். வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால், அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கி நிற்கிறது. முழுவீச்சில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுத்து நிறுத்த வேண்டுமென முயற்சியில் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

கதவைத் திறக்காதே கொரோனா வரும்
சீன மக்கள் கிட்டத்தட்ட வீட்டுச்சிறையில் இருப்பது போலத்தான் இருந்து வருகின்றனர். காற்றின் மூலம் எளிதாக பரவும் என்பதால் வீட்டுக்கதவு, ஜன்னலை கூட யாரும் திறப்பதே இல்லை. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், கடைகள் என பெரும்பாலானவை மூடியே கிடக்கின்றன. இந்நோய் பாதிக்கப்பட்டவர் தும்மினால், 10 மீட்டருக்குள் இருப்பவரும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அறிகுறிகள் என்னென்ன?
கொரோனா வைரஸ் தாக்குதல் முதலில் சாதாரண வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் போலத்தான் தொடங்குகிறது. முதலில் வைரஸ் தாக்கியதும் 2 நாட்கள் எந்த பிரச்னையும் இருக்காது. 3வது நாள் மெல்லிய காய்ச்சல் தொடங்கி, அதிகபட்ச வெப்பநிலையில் காய்ச்சல் வரும். பின்னர் அடிவயிற்றை இறுக்கி பிடிக்கும் கடுமையான இருமல் வரும். தலைவலி, வயிற்றுப்போக்கு அதன் பின்னர் நுரையீரலை பாதிக்கும். இதனால் சுவாச மண்டலம் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் வரும். தொடர்ந்து சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட மற்ற உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க தொடங்கி விடும். கடைசியாக உயிரிழப்பு ஏற்படும்.

உணவு முறையால் உருக்குலையும் சீனா
பொதுவாக, சீனர்களுக்கு 2 வகையான உணவுப்பழக்கம் இருக்கிறது. சீனர்கள் சில இறைச்சிகளை சமைத்தும், சிலவற்றை அப்படியே சாப்பிடுவார்களாம். கிருமி பாதிக்கப்பட்ட, சமைக்கப்படாத இறைச்சிகளை உண்ணும்போது வைரஸ் எளிதில் தாக்குகிறது. இதனால்தான் கடந்த 2002ல் சார்ஸ், இம்முறை கொரோனா வைரஸால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர் சீன மக்கள்.

பரப்பியது பாம்பா? பறக்கும் வவ்வாலா?
கொரோனா வைரஸ் எப்படி பரவியது என்பது குறித்து பல்வேறு கருத்துகள் பரவுகின்றன. சீனாவின் வுகான் மாகாணத்தில்தான் முதன்முதலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தார். சீனாவிலேயே இங்குதான் பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளது. வுகானில் மிகப்பெரிய உயிரின சந்தை உள்ளது. இங்கு ஒட்டகம், நரி, முள்ளம்பன்றி, பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள், கோழி, வவ்வால் உள்ளிட்ட பல்வேறு வகையிலான பறவைகள் உயிருடன் உணவுக்காக விற்பனை செய்யப்படுகின்றன. இறைச்சிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. முதலில் ஒட்டகத்தில் இருந்து, வைரஸ் பரவியிருக்கலாம் என கருதப்பட்டது. ஒட்டகம் நாம் தரும் உணவை உண்பதால் வாய்ப்பில்லை. சார்ஸ் போல வவ்வாலில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பாம்புகளை பச்சையாக சாப்பிடும்போது, அல்லது வவ்வால்களை வேட்டையாடும் பாம்புகள் மூலமாகவும் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்ற கருத்தும் பரவலாக நிலவுகிறது.

900 பேரை பலி வாங்கிய ‘சார்ஸ்’
கடந்த 2002, நவம்பர் மாதத்தில் தெற்கு சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில், சார்ஸ் (SARS – Severe Acute Respiratory Syndrome) நோய் பரவத்தொடங்கியது. இந்த வைரஸ் SARS-CoV  எனப்பட்டது. வவ்வால் மூலம் பிற விலங்குகளுக்கும், பின்னர் மனிதர்களுக்கும் பரவியதாக கூறப்பட்ட இந்த நோயானது, கிட்டத்தட்ட கொரோனா வைரஸ் அறிகுறிகளையே கொண்டிருந்தது. சீனாவை தொடர்ந்து ஐரோப்பா, வட அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஆசிய நாடுகளுக்கும் பரவியது. 900க்கும் மேற்பட்டோர் பலியாயினர். உலக சுகாதார நிறுவனம் மற்றும் சர்வதேச மருத்துவர்கள் ஒருங்கிணைந்து இந்நோய் மேற்கொண்டு பரவாமல், முழுமூச்சாக செயல்பட்டு தடுத்து நிறுத்தினர். 2003 ஜூலைக்கு பிறகு தற்போது வரை இந்த வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்க்கின் ஆயுள் ஆறு மணி நேரம்
ஒரு விண்வெளி வீரர் போல ஆடை அணிந்துதான், டாக்டர்கள், நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். முகத்தில் மாஸ்க் அணிந்து கொள்கின்றனர். இந்த மாஸ்க்கை அதிகபட்சமாக 6 மணிநேரத்திற்குள் மாற்ற வேண்டும். டாக்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

யாருக்கு இந்நோய் எளிதில் குணமாகும்?
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதுபோன்ற அறிகுறிகளுக்கான மருந்துகள் மட்டுமே வழங்கப்படுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள், இதிலிருந்து எளிதில் மீண்டு விடுவார்கள். குழந்தைகள், முதியவர்கள் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றே மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்தாண்டே பாதிப்பு மறைத்ததா சீன அரசு?
கடந்த டிச. 2ம் தேதிதான் சீனாவில் கொரோனோ வைரஸால் அந்நாட்டை சேர்ந்த ஒருவர் பாதிக்கப்பட்டார். இவரது ரத்தத்தை பரிசோதித்தபோது, அதில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. துவக்கத்தில் குணப்படுத்தி விடலாம் என்ற அலட்சியம் காட்டியதால், நோய் குறித்து சீன அரசு வெளிப்படுத்தாமல் மறைத்து விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 25 – 30 பேர் வரை இறந்ததால், அதிர்ச்சியடைந்த சீன அரசு, இந்நோய் குறித்து மக்களுக்கு முறையாக அறிவித்தது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy