கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) விஸ்வரூபம் – சீனா சென்று வந்தவர்கள், அமெரிக்காவில் நுழைய தடை

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) விஸ்வரூபம் – சீனா சென்று வந்தவர்கள், அமெரிக்காவில் நுழைய தடை

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் விஸ்வரூபம் எடுத்து வருவதால், அந்த நாட்டுக்கு சென்று வந்தவர்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்:

சீனாவில் உகான் நகரில் உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் கடந்த மாதம் தோன்றி தாக்கத்தொடங்கியது. இந்த வைரஸ் தாக்கம், அந்த நாட்டின் பிற மாகாணங்களுக்கும் மின்னல் வேகத்தில் பரவியது.

அது மட்டுமின்றி, 22 உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் நோய் பரவி, தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வருகிறது.

உலக நாடுகளைப் பொறுத்தமட்டில் ஜப்பானில் 12, தாய்லாந்தில் 14, சிங்கப்பூரில் 13, ஆஸ்திரேலியா 9, தைவான் 9, மலேசியா 8, தென்கொரியா 7, பிரான்ஸ் 6, அமெரிக்கா 6, ஜெர்மனி 5, வியட்நாம் 5, ஐக்கிய அரபு அமீரகம் 4, கனடா 3, இத்தாலி 2, ரஷியா 2, இங்கிலாந்து 2, கம்போடியா 1, பின்லாந்து 1, இந்தியா 1, நேபாளம் 1, பிலிப்பைன்ஸ் 1, இலங்கை 1 என இந்த நோய் தாக்கியவர்களின் எண்ணிக்கை பதற வைப்பதாக அமைந்துள்ளது.

இதன் காரணமாக உலக சுகாதார நிறுவனம், உலகளாவிய சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது.

சீனாவில் நேற்று முன்தினம் நிலவரப்படி இந்த வைரஸ் நோய் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 249 பேர் ஹூபெய் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவையே பதற வைத்துள்ளது. சீனாவுக்கு கடந்த 2 வாரங்களில் சென்று வந்த பிற நாட்டினர் அமெரிக்காவில் நுழைய அதிரடியாக தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதை அமெரிக்க சுகாதார மந்திரி அலெக்ஸ் அசார் அறிவித்துள்ளார்.

மேலும், சீனாவின் ஹூபெய் மாகாணத்துக்கு போய் விட்டு தாய்நாடு திரும்புகிற அமெரிக்கர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள்; சீனாவின் பிற பகுதிகளுக்கு சென்று விட்டு வருகிற அமெரிக்கர்கள் 2 வாரம் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்தார்.

இதையொட்டி நிருபர்களிடம் பேசிய அலெக்ஸ் அசார், உலக சுகாதார அமைப்பின் முடிவை அடுத்து அமெரிக்காவிலும் பொது சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாக தெரிவித்தார்.

இந்த கட்டுப்பாடுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.

அமெரிக்காவைப்போன்று ஆஸ்திரேலியாவும் அதிரடியில் இறங்கியது. சீனா போய் விட்டு வருகிற பிற நாட்டினர் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டினர் சீனா போய் வந்தால், அவர்கள் 2 வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் அறிவித்துள்ளார்.

கவுதமாலாவும் இதேபோன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan