ஊராட்சி தலைவர் அடித்த போஸ்டரில் அதிமுக கொடி கலரில் மாவட்ட ஆட்சியர் பெயர்

ஊராட்சி தலைவர் அடித்த போஸ்டரில் அதிமுக கொடி கலரில் மாவட்ட ஆட்சியர் பெயர்

சிவகங்கை: சிவகங்கை அருகே சாலூரில் ஊராட்சி மன்ற தலைவர் அடித்த போஸ்டரில், அதிமுக கொடி கலரிலேயே, கலெக்டரின் பெயரும் இடம் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை அருகே சாலூரில் சுகாதார சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதற்காக  ஊராட்சி தலைவர் நாச்சம்மாள் அர்ச்சுனன், அதிமுக நிர்வாகிகளை வரவேற்று போஸ்டர் அடித்து பல்வேறு பகுதிகளில் ஒட்டியுள்ளார். இதில் அமைச்சர் பாஸ்கரன், அதிமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், அதிமுக நிர்வாகிகள், அதிமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் பெயர்கள் அதிமுக கொடி கலரிலேயே உள்ளன. இந்த போஸ்டரில் அதிமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதனுக்கு அடுத்தபடியாக சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தனின் பெயர், அதிமுக கொடி கலரிலேயே இடம் பெற்றுள்ளது.

கலெக்டர் தவிர்த்து வேறு எந்த அரசு அலுவலரின் பெயரும் இடம் பெறவில்லை. இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், முன்பெல்லாம் அரசு அலுவலர்களுக்கென விதிமுறைகள் இருந்தன. இந்த ஆட்சியில் யாரும் எதையும் பின்பற்றுவதில்லை. நினைத்ததையெல்லாம் செய்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை வைத்தே இந்த ஆட்சி எப்படி நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். ஏதேனும் பிரச்னை எழுந்தால் போஸ்டர் அடித்த அச்சக உரிமையாளரை போலீஸ் மூலம் மிரட்டி கைது செய்வார்கள். இதுதான் இவர்களின் அதிகபட்ச நடவடிக்கை என்றனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy