சீனாவில் இருந்து விமானத்தில் சென்னை வந்திறங்கி ஆம்பூர் சென்ற சீனர்கள் 3 பேர் திடீர் மாயம்

சீனாவில் இருந்து விமானத்தில் சென்னை வந்திறங்கி ஆம்பூர் சென்ற சீனர்கள் 3 பேர் திடீர் மாயம்

* போலி முகவரி கொடுத்தது அம்பலம்
* கொரோனா வைரஸ் பாதித்தவர்களா?

வேலூர்: சீனாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து, அங்கிருந்து ஆம்பூர் சென்ற சீனர்கள் 3 பேர் திடீரென மாயமாகியுள்ளனர். சீனாவை கதிகலங்க வைத்திருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், சீனாவில் இருந்து கடந்த 30ம் தேதி சென்னை விமானநிலையம் வந்த 5 பேர் வேலூர் மாவட்ட முகவரியை கொடுத்து சென்றுள்ளனர். இதில் 3 பேர் சீனர்கள், அவர்கள் பெயர் சின்ஹிஜன், ஹவுங் சோ, செங்டெங்க் ஆகும். இவர்கள் சீனாவில் இருந்து ஆம்பூரில் ஷூ உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்ய வந்து இருப்பதாக அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். விமான நிலையத்தில் ஆம்பூர், குப்பம் பகுதி, இம்ரான் நகருக்கு செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.   

இதையடுத்து அவர்கள் கொடுத்த ஆம்பூர் முகவரிக்கு சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் நேற்று சென்றனர். அப்போது 3 சீனர்களும் அந்த முகவரியில் இல்லை. அவர்கள் போலி முகவரி கொடுத்துவிட்டு மாயமானது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாமா என்ற சந்தேகத்தில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் சுரேஷ் கூறுகையில், சீனாவில் இருந்து ஆம்பூர் வந்த 3 பேர் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை.

விருப்பாட்சிபுரத்தைச் சேர்ந்த திருமுகன் நல்ல நிலையில் உள்ளார். சத்துவாச்சாரி தென்றல் நகர் முகவரி கொடுத்த சரத்பாபு விழுப்புரத்தில் இருப்பது தெரியவந்தது. இதனால் விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளோம் என்றார். ஏர்போர்ட்டில் சரத்பாபு கொடுத்த செல் போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, மறுமுனையில் பேசிய நபர் தான் சரத்பாபு இல்லை என்றும், செல்வராஜ் எனவும் கூறி உள்ளார். இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

* இன்ஜினியருக்கு காய்ச்சல் குறைகிறது
கடந்த மாதம் 19ம் தேதி சீனாவில் இருந்து திருவண்ணாமலை திரும்பிய கம்ப்யூட்டர் இன்ஜினியர் விமல்(28) என்பவருக்கு, 2 நாட்களுக்கு முன்பு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்தம், சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவுகள் நாளை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விமலுக்கு, காய்ச்சல் படிப்படியாக குறைந்திருக்கிறது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy