பழநி மலைக்கோயிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்: பாதுகாப்பு பணியில் 3,500 காவல் துறையினர்

பழநி மலைக்கோயிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்: பாதுகாப்பு பணியில் 3,500 காவல் துறையினர்

பழநி: பழநி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது. பாதுகாப்பு பணிக்கு 3,500 போலீசாரை ஈடுபடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இத்திருவிழா வரும் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். பக்தர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பழநியாண்டவர் கல்லூரியில் நேற்று நடந்தது.
கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். பழநி கோயில் செயலர் ஜெயசந்திர பானுரெட்டி முன்னிலை வகித்தார். பழநி சப்-கலெக்டர் உமா, பழநி கோயில் துணை ஆணையர் செந்தில்குமார், டிஎஸ்பி விவேகானந்தன் மற்றும் போக்குவரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மருத்துவத்துறை, மின்சாரத்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை உட்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், பழநி தைப்பூச திருவிழா பாதுகாப்புப் பணிக்கு 3,500 போலீசாரை ஈடுபடுத்த வேண்டும். பாதயாத்திரை பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்காக 50 ஆயிரம் ஒளிரும் பட்டைகள் மற்றும் ஒளிரும் குச்சிகள் சுழற்சி முறையில் வழங்கப்படும். பாதயாத்திரை பக்தர்கள் தங்குவதற்காக முக்கிய வழித்தடங்களில் 11 நிரந்தர மண்டபங்கள் மற்றும் 43 தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 48 கட்டணமில்லா குளியலறை மற்றும் கழிப்பறைகள், 28 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் முனையம், 8 நிரந்தர நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. எதிர்பாராத மின்தடையை எதிர்நோக்க 11 இடங்களில் நிரந்தர மின்னாக்கி மையங்களும், 4 தற்காலிக மின்னாக்கி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. 3 இடங்களில் நிரந்தர முதலுதவி சிகிச்சை மையங்கள், 2 டாக்டர்கள் மற்றும் 8 மருத்துவ பணியாளர்களுடன் இயக்கப்பட உள்ளது.

பக்தர்கள் விரைவில் தரிசனம் செய்வதற்காக 8 சீட்டு வழங்கும் மையங்களும், வடக்கு பிரகாரங்கள் கூடுதல் சீட்டு வழங்கும் மையங்களும் ஏற்படுத்தப்பட உள்ளது. இடும்பன் குளத்தில் பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக 23 ஷவர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்துவதற்காக 7 மையங்களில் 300 பேர் பணியில் இருப்பர். குற்ற சம்பவங்களை தடுக்கவும், கண்காணிக்கவும் 12 இடங்களில் போலீசாரால் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன.  சாலையோர உணவகங்களில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிப்பது, நியாயமான விலையில் விற்பனை செய்வதை உறுதிபடுத்த கூட்டத்தில் நகராட்சி மற்றும் உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

சிறப்பு ரயில்கள் இயக்கம்

மதுரை: தைப்பூசத்தை முன்னிட்டு பழநிக்கு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சிறப்பு ரயில்கள் விபரம் வருமாறு: மதுரை – பழநி சிறப்பு விரைவு ரயில், பிப்.8ம் தேதி காலை 8.45 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, முற்பகல் 11.45 மணிக்கு பழநி சென்றடையும். மறுமார்க்கத்தில் பிப். 8ம்தேதி இரவு 8 மணிக்கு, பழநி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, இரவு 10.15 மணிக்கு மதுரை சென்றடையும். கோவை – பழநி பயணிகள் சிறப்பு ரயில், இன்று (பிப்.2) முதல் வரும் 12ம் தேதி வரை, கோவை ரயில் நிலையத்திலிருந்து, காலை 9.45 மணிக்கு புறப்பட்டு அன்று மதியம் 12.45 மணிக்கு பழநி சென்றடையும். மறுமார்க்கத்தில்(பிப்.2 முதல் 12ம் தேதி வரை) பழநியிலிருந்து பிற்பகல் 1.45 மணிக்கு புறப்பட்டு, அன்று மாலை 4.45 மணிக்கு கோவை சென்றடையும். இத்தகவலை மதுரை கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வீராசுவாமி தெரிவித்துள்ளார்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy