7 பேர் விடுதலை விவகாரம்… ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது… உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!

7 பேர் விடுதலை விவகாரம்… ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது… உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு நீதிமன்றம் நேரடியாக உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுகளாக பேரறிவாளன், நளினி, முருகன் உள்பட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்துவருகிறார்கள். இவர்கள் 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி தீர்மானம் நிறைவேற்றியது. அந்தத் தீர்மானம் தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்தத் தீர்மானம் மீது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எந்த முடிவை அறிவிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்.

 


இந்தநிலையில் பேரறிவாளன் தொடர்ந்து மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற  நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள், 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று கருத்து தெரிவித்தது.  இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு எங்களால் நேரடியாக அழுத்தம் கொடுக்க முடியாது என்றும், தமிழக அரசின் தீர்மானம் குறித்து ஆளுநரிடம் கேட்க வேண்டியது தமிழக அரசுதான், நாங்கள் அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


விசாரணையின்போது, 7 பேர் விடுதலை தொடர்பான கோப்பு ஆளுநர் மாளிகையில் ஏன் இத்தனை மாதங்களாக நிலுவையில் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்விக்குப் பதில் அளித்த தமிழக அரசு வழக்கறிஞர்,  ஆளுநருக்கு அனுப்பிய தீர்மானம் மீது இன்னும் முடிவு எடுக்கப்படாமல் இருப்பதாகத் தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள்,  7 பேர் விடுதலை விவகாரத்தில்  அமைச்சரவை தீர்மானம் குறித்து ஆளுநரிடம் முறையிடுமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனையடுத்து  இந்த வழக்கு விசாரணை 2 வாரத்துக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Source: AsianetTamil

Author Image
Kundralan M