ஆம்லெட்டும், ஆஃப் பாயிலும் கொரனா வைரஸுக்கு ரொம்ப இஷ்டம்: அலர்ட் அலாரம் அடிக்கும் மருத்துவர்.

*    தினகரனைப் பற்றிய பல உண்மைகளை நான் இப்போது வெளியிட காரணம், மக்கள் இப்போதாவது அவரை தெரிந்து கொள்ள வேண்டும்! என்பதால்தான். தினகரனுக்காக தங்கள் பதவியை இழந்த 18 எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அந்த பாவத்துக்குப் பிராயசித்தமாக தினகரன் தன் எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். 
–    பெங்களூரு புகழேந்தி (மாஜி அ.தி.மு.க. நிர்வாகி)

*    மனிதர்களை வர்ணாசிரம முறையில் சாதிரீதியாகப் பிரிப்பதை ஏற்றுக் கொண்டவர்கள்தான் ஹெச்.ராஜா, கே.டி.ராகவன் போன்றோர். அதனால் என்னை கருத்து ரீதியாக விமர்சிக்காமல், பிறப்பால் நான் யார்? என்பதை தேடிப் பார்க்கிறார்கள். எமெர்ஜென்ஸி காலத்தில் நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தேன். அப்போது ஒரு வருடம் தலைமறைவாக செயல்பட வேண்டிய சூழல். அப்போது கட்சியில் எனக்கு ‘டேவிட்’ என பெயர் சூட்டினர். இதை வைத்துதான் என்னை இப்படி பேசுகிறார்கள் பா.ஜ.க.வினர். 
–    பெ.மணியரசன் (தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்)

*    தமிழக மக்களுக்கு நன்மை கிடைப்பதற்காக, அடிமையாக இருக்கிறீர்கள் என எங்களைப் பார்த்து கூறினால், அதற்கு கவலையில்லை. இதில் சுயநலம் ஏதுமில்லை, பொதுநலம் மட்டுமே உள்ளது. எனவே எங்களை இந்த நோக்கில் ‘அடிமை அரசு’ என்று சொன்னால், அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். 
–    ஆர்.பி.உதயகுமார் (வருவாய்த்துறை அமைச்சர்)

*    கொஞ்சம் பொறுங்கள்! ரஜினி முதலில் கட்சி துவக்கட்டும். கட்சி துவங்கிய பின் அவர் என்ன சொல்கிறார் என்பதைப் பார்த்து, பின்னர் சொல்கிறோம். பா.ம.க.வுடன் ரஜினிகாந்த் கூட்டணி அமைக்க திரைமறைவில் பேச்சு துவங்கிவிட்டது என தமிழருவி மணியன் பேட்டியளித்துள்ளார். அப்படி எந்த பேச்சும் துவங்கவில்லை. 
–    ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்)

*    ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. பொய் மற்றும் வெற்று கோஷம் தோல்வியடைந்துள்ளது. இந்தியாவின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் வசிக்கின்றனர். இவர்கள் அனைவருமே பா.ஜ.க.வின் பிரிவினைவாத திட்டங்களைத்  தோற்கடித்துள்ளனர். 
–    ப.சிதம்பரம் (காங்கிரஸ் எம்.பி.)

*    டெல்லியில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்பது தெரிந்ததுதான். ஆனால், அபார வெற்றி பெறுவோம்! என கூறிய பா.ஜ.க.வுக்கு என்ன ஆனது?! பிரதமர் மோடியின் செயல்பாட்டில் திருப்தி அடைந்திருந்தால், டில்லி மக்கள் பா.ஜ.க.வுக்குதான் ஓட்டுப் போட்டிருப்பார்கள். 
–    கமல்நாத் (மத்தியபிரதேச முதல்வர்)

*    தே.மு.தி.க.வுக்கு கொடி உருவாக்கப்பட்ட இந்த இருபது ஆண்டுகளில் எத்தனையோ வெற்றிகள், தோல்விகள், சூழ்ச்சிகள், துரோகங்களை சந்தித்த போதும் நம்  தொண்டர்கள் என்னுடன் உறுதியாக இருக்கின்றனர். அவர்களால்தான் நம் கட்சி வீறு கொண்டு, வெற்றி நடை போடுகிறது. 
–    விஜயகாந்த் (தே.மு.தி.க. தலைவர்)

*    நடிகர் ரஜினிகாந்த் படம் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன் வீட்டை விட்டு வெளியே வருவார். பத்திரிக்கையாளர்களை சந்திப்பார், ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் என்பார். கட்சி துவக்கும் நாளை அவர் இப்போதும் அறிவிக்கவில்லை, எப்போதும் அறிவிக்கப் போவதுமில்லை. 
–    இரா.முத்தரசன் (சி.பி.ஐ. மாநில செயலாளர்)

*    இட ஒதுக்கீடு வழங்குவது அடிப்படை உரிமையல்ல! என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. இதை எதிர்த்து மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். 
–    திருமாவளவன் (லோக்சபா எம்.பி.)

*    கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க மாமிச உணவை தவிர்க்க வேண்டிய தேவையில்லை. நன்கு வேக வைத்துச் சாப்பிடலாம். முட்டை, ஹாஃப் பாயிலைத் தவிர்க்கவும். கொரானா கூட வவ்வாலில் இருந்து பரவியதாக அறியப்பட்டுள்ளது. சீனாவில் முன்பு வந்த சார்ஸ் வைரஸ் கூட வவ்வாலில் இருந்து வந்ததுதான். 
–    ஃபரூக் அப்துல்லா (பொது நல மருத்துவர்)

Source: AsianetTamil

Author Image
Kundralan M