சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தடியடி

சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தடியடி

சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை:

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர், அரசியல் கட்சியினர், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சென்னை வண்ணாரபேட்டையில் இன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து போராட்டக்காரர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் வற்புறுத்தியதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவர்களது கோரிக்கைகளை கேட்ட அவர், பின்னர் போராட்டக்காரர்களை அமைதியான முறையில் கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவை, திருச்சி, ஈரோடு, திருப்பூர், தென்காசி, கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan