8 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்

8 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடுத்த மாதம் 8 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை:

தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் மொத்தம் 24 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 3,350 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கின்றன.

திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய 9 இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது.

இந்த 9 கல்லூரிகள் உள்பட 11 மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்காக நேற்றைய பட்ஜெட்டில் ரூ.1,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதில் 8 மருத்துவ கல்லூரிகளுக்கு அடுத்த மாதம் (மார்ச்) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்ட உள்ளார். மார்ச் 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ராமநாதபுரத்திலும், பிற்பகல் 3 மணிக்கு விருதுநகரிலும் மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.

4-ந்தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு கிருஷ்ணகிரி, 5-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு நாமக்கல், மாலை 4 மணிக்கு திண்டுக்கல்லிலும் மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

7-ந்தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு நாகப்பட்டினத்திலும், 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு திருவள்ளூரிலும், 14-ந்தேதி (சனிக்கிழமை) திருப்பூரிலும் மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்ட உள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan