Press "Enter" to skip to content

நடிகர் விஜய் காங்கிரசுக்கு வந்தால் வரவேற்போம்- கே.எஸ்.அழகிரி பேட்டி

காங்கிரஸ் கட்சிக்கு நடிகர் விஜய் வந்தால் வரவேற்போம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

சென்னை:

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜே.எம்.எச்.ஹசன் மவுலானா தலைமை தாங்கினார். கட்சியின் தேசிய செயலாளரும், இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளருமான கிருஷ்ணா அல்லவரு, இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளர் ஜெபி மேத்தர் ஆகியோர் மேலிட பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வேலையில்லா திண்டாட்டம் குறித்த தேசிய அளவிலான பேச்சுப்போட்டியினை தொடங்கி வைத்தார். கூட்டத்தில் மூத்த தலைவர் குமரி அனந்தன், மாநில துணைத்தலைவர் ஆர்.தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக உலக தாய்மொழி நாளை முன்னிட்டு, தமிழ் தாய் உருவப்படத்துக்கு கே.எஸ்.அழகிரி தலைமையில் மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது. மேலும், கே.எஸ்.அழகிரி முன்னிலையில் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ மீனவர் அணி புதிய தலைவராக பொறுப்பேற்றார்.

பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

அவிநாசி அருகே நடைபெற்ற கோர விபத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்ற விபத்துக்கு காரணம் முறையான ஓட்டுனர் பயிற்சியின்மை மற்றும் இந்தியன் திரைப்படத்தில் வருவது போன்று அறைக்குள் இருந்துகொண்டு வாகனங்களுக்கு தரச்சான்று வழங்குவதும் ஆகும். இவற்றை போக்க தமிழ்நாடு போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,

விவசாயிகளுக்கான பயிர் பாதுகாப்பு காப்பீடு திட்டத்துக்கான மானிய தொகையை 50 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக மத்திய அரசு குறைத்து இருப்பது மிகவும் தவறான முடிவாகும். இதனால் விவசாயிகளின் இறப்பு விகிதம் அதிகரிக்கும். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

ஆனால், போராட்டக்காரர்கள் மீது வன்முறையாளர்கள் என்ற முத்திரை குத்தப்படுகிறது. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை தமிழக அரசு கூறவில்லை. எனவே, இதுவும் பல்வேறு அறிவிப்புகளில் ஒன்றாக போய்விடும்.

ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும். அவர்களை விடுவித்தால், சிறைச்சாலைகளில் 25 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் கொலைக்குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும்.

7 பேர் விடுதலையை கோர்ட்டு அறிவித்தால் ஏற்றுக்கொள்வோம். ஆனால், அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் விடுதலைக்கு கோரிக்கை வைப்பவர்களின் வீடுகளில் இதுபோன்ற கொலை நடந்தால் ஏற்றுக்கொள்வார்களா? எனவே, 7 பேரை கோர்ட்டுதான் மன்னிக்க வேண்டுமே தவிர அரசியல் கட்சிகள் அல்ல.

நடிகர் ரஜினிகாந்துக்கு ரூ.64 லட்சம் கட்டினால் மேல்முறையீடு செய்யமாட்டோம் என்று தெரிவித்த வருமான வரித்துறையினர் நடிகர் விஜய்க்கு 24 மணிநேர கால அவகாசம் கூட வழங்கவில்லை. விஜய் காங்கிரஸ் கட்சியில் சேருவது பற்றி பேசப்பட்டதே தவிர அழைக்கப்படவில்லை. அவர் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் மனதார ஏற்றுக்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின்போது மாநில பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, ஊடகப்பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா, டாக்டர் விஷ்ணுபிரசாத் எம்.பி. உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »