வன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு

வன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு

டெல்லியின் மாஜ்பூரில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பலியான தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என டெல்லி அரசும், பா.ஜ.க.வும் அறிவித்துள்ளது.

புதுடெல்லி:

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் சிஏஏ ஆதரவு போராட்டங்களும் நடைபெறுகின்றன.

இதற்கிடையே, தலைநகர் டெல்லியின் மாஜ்பூர் பகுதியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் தலைமை காவலர் ரத்தன் லால் உயிரிழந்தார். இவர் கோலக்பூரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றியவர்.

இந்நிலையில், டெல்லியின் மாஜ்பூரில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பலியான தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு டெல்லி அரசும், பா.ஜ.க.வும் தலா 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளன.

இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பேசிய முதல் மந்திரி கெஜ்ரிவால், மாஜ்பூரில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பலியான தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். ரத்தன் லால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதேபோல், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும், டெல்லி வன்முறையில் பலியான தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு பாஜக சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan