மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் ராஜினாமா- நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே விலகல்

மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் ராஜினாமா- நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே விலகல்

மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், தனது அரசாங்கம் மெஜாரிட்டியை இழந்துள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வதற்கு முன்பாகவே ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

போபால்:

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா வெளியேறி பாஜகவில் இணைந்தார். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரும் ராஜினாமா செய்தனர். அவர்களில் முதலில் 6 மந்திரிகளின் ராஜினாமாவை மட்டும் சபாநாயகர் ஏற்றார். மற்றவர்களின் ராஜினாமா கடிதங்களை நேற்று நள்ளிரவில் ஏற்றதாக அறிவித்தார். இதனால் கமல்நாத் தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்துள்ளது.

சட்டசபையில் இன்று மாலை 5 மணிக்குள் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினால் நிச்சயம் அரசு தோல்வியடையும் நிலை உள்ளது. 

இந்த பரபரப்பான சூழ்நிலையில், கமல்நாத் வீட்டில் காங்கிரஸ் சட்டமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு கமல் நாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் ஐந்து ஆண்டு காலம் ஆட்சி செய்வதற்காக மக்கள் எங்களுக்கு வாய்ப்பு வழங்கினர். தற்போது ஆட்சி 15 மாதங்களை மட்டுமே கடந்துள்ளது. இந்த காலகட்டத்தில் மாநில வளர்ச்சியில் மட்டுமே நான் கவனம் செலுத்தினேன். 

பாஜக எப்போதும் எனக்கு எதிராக சதி செய்துகொண்டே இருந்தது. எங்கள் 22 எம்எல்ஏக்களை அவர்கள் பெங்களூருவில் பிடித்து வைத்திருந்தனர். மக்களின் விருப்பத்திற்கு மாறாக சென்றவர்களை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இந்த நம்பிக்கை மீறல், எனக்கு எதிரானது அல்ல, மத்திய பிரதேச மக்களுக்கு எதிரானது. 

மத்திய பிரதேசத்தில் உள்ள மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதை பாஜக விரும்பவில்லை. பாஜக மத்திய பிரதேச மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. இத்தகைய சூழ்நிலையில் நான் முதலமைச்சர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை. பதவியை ராஜினாமா செய்கிறேன். பிற்பகலில் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுக்க உள்ளேன். 

இவ்வாறு அவர் கூறினார்.

கமல்நாத் தலைமையிலான மந்திரிசபை பதவி விலகியதும், 107 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள பாஜக ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan