கொரோனா பாதித்த மகனைதொடர்வண்டித் துறை விடுதியில் தங்க வைத்த பெண் அதிகாரி

கொரோனா பாதித்த மகனைதொடர்வண்டித் துறை விடுதியில் தங்க வைத்த பெண் அதிகாரி

மகன் வெளிநாட்டுக்கு சென்று வந்ததை மறைத்ததுடன், அவரை ரெயில்வே விடுதியில் தங்க வைத்ததாக ரெயில்வே பெண் அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால், வெளிநாடு சென்று வந்ததை தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன. பிறருக்கு நோய் பரவாமல் இருப்பதற்காக, அவர்கள் தனிமைப் படுத்தப்படுவது அவசியம் ஆகும்.

ஆனால், தென்மேற்கு ரெயில்வேயில் உதவி பணியாளர் நலத்துறை (போக்குவரத்து) அதிகாரியாக இருக்கும் ஒரு பெண்மணி, இந்த கட்டுப்பாடுகளை மீறி உள்ளார்.

அந்த பெண் அதிகாரியின் 25 வயதான மகன், ஜெர்மனிக்கு சென்று விட்டு, ஸ்பெயின் வழியாக கடந்த 13-ந் தேதி பெங்களூரு திரும்பினார். விமான நிலைய ‘தெர்மல் ஸ்கேனர்’ பரிசோதனையிலேயே அவருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதால், அவரை வீட்டில் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், வீட்டில் தங்க வைத்தால், தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் பரவி விடும் என்று கருதிய அந்த பெண் அதிகாரி, பெங்களூரு ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே தங்கும் விடுதியில் மகனை தங்க வைத்தார். மகன் வெளிநாடு சென்று வந்ததை கர்நாடக அரசிடமோ, ரெயில்வே துறையிடமோ தெரிவிக்காமல் மறைத்து விட்டார்.

அந்த விடுதி, ரெயில்வே அதிகாரிகள் அடிக்கடி வந்து செல்லும் இடமாகும். சில ரெயில்வே அதிகாரிகளின் குடும்பத்தினரும் தங்கி இருந்தனர்.

அங்கு தங்கி இருந்தபோது, பெண் அதிகாரியின் மகன், பரிசோதனைக்காக, வெளியே ஆஸ்பத்திரிக்கு சென்று வந்துள்ளார். 15-ந் தேதிவாக்கில், அந்த வாலிபருக்கு கொரோனா தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே, இந்த தகவல் தெரிய வந்தவுடன் ரெயில்வே நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது. பெண் அதிகாரியை இடைநீக்கம் செய்துள்ளது.

மகன் வெளிநாடு சென்று வந்ததை மறைத்ததுடன், மற்றவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்வகையில் ரெயில்வே விடுதியில் தங்க வைத்ததற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே செய்தித்தொடர்பாளர் ஈ.விஜயா தெரிவித்தார்.

அதே சமயத்தில், பெண் அதிகாரியின் மகன் ரெயில்வே விடுதியில் தங்கி இருந்தபோது, அங்கே தங்கி இருந்த ரெயில்வே அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் ஆகியோருக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா என்பதை உஷாராக கவனித்து வருமாறு கூறப்பட்டுள்ளது. அங்கு தங்கி இருந்தவர்கள் விவரம், மாநில அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதி மூடப்பட்டுள்ளது. பணியில் இருந்த துப்புரவு தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். விடுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan