சட்டசபையில் கூட்டமாக அமர்ந்து விவாதித்துக்கொண்டிருப்பது முறையா? மு.க.ஸ்டாலின் கேள்வி

சட்டசபையில் கூட்டமாக அமர்ந்து விவாதித்துக்கொண்டிருப்பது முறையா? மு.க.ஸ்டாலின் கேள்வி

கொரோனா எச்சரிக்கையாக கூட்டம் கூடக்கூடாது என்று சொல்லி விட்டு நாமே சட்டசபையில் கூட்டமாக அமர்ந்து விவாதித்துக் கொண்டிருப்பது முறையா? என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

சென்னை:

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கொரோனா வைரஸ் தாக்கக்கூடிய பிரச்சினை நாளுக்கு நாள் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை (நாளை) காலையில் இருந்து மாலை வரை யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என்று, நம்முடைய பிரதமர் தெளிவான ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

இந்தியாவில் இருக்கும் பல்வேறு மாநிலங்கள், குறிப்பாக ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரகாண்ட் சட்டசபை கூட்டத் தொடர் எல்லாம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. நாமும் விழிப்போடு இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். நோய்த்தடுப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். தனிமைப்படுத்துவதற்கு வலியுறுத்திவிட்டு; கூட்டம் கூடாதீர்கள் என்று தொடர்ந்து எச்சரிக்கை செய்துவிட்டு; இந்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அதேநேரத்தில், நாமே சட்டமன்றத்தில் கூட்டமாக அமர்ந்து இங்கே விவாதித்துக் கொண்டிருப்பது முறையா?.

இங்கே அமைச்சரவையில் ஒரு மூத்த அமைச்சர் தன்னுடைய வீட்டு வாசலில் ஒரு விளம்பர பலகை வைத்திருக்கிறார். அது பத்திரிகையில் வந்துள்ளது. நான் பெயர் சொல்ல விரும்பவில்லை. அதில், யாரும் என்னை வந்து பார்க்க வேண்டாம், சென்னைக்கும் தேடி வந்து என்னை பார்க்க வேண்டாம் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பிரச்சினையை அடிப்படையாக வைத்து அப்படி வைத்திருக்கிறார். எதற்காக சொல்கிறேன் என்றால், அமைச்சருக்கே அந்த அச்சம் இருக்கிறது. ஆனால் கூட்டமாக நாம் இங்கே உட்கார்ந்து கொண்டு சட்டசபையை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பதற்காகத்தான் சொன்னேனே தவிர, விமர்சனம் செய்வதற்காக சொல்லவில்லை.

நாம் சட்டசபை கூட்டத்தொடரை ஒத்திவைப்பது என்பது, ஒரு பீதியை ஏற்படுத்துவதற்காக அல்ல என்பதை முதலில் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். காரணம், மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி, இந்த நேரத்தில் அந்தந்த தொகுதியில் அந்தந்த சட்டசபை உறுப்பினர்கள் இருந்தால்தான், ஓரளவுக்கு நாம் மக்களோடு இருந்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய ஒரு சூழல் உருவாகும்.

அதேபோல் விழிப்புணர்வுப் பணிகள், நோய்த்தடுப்பு பணிகள் போன்றவற்றை கண்காணிக்கவும் முடியும். நாம் வாக்களித்த சட்டசபை உறுப்பினர்கள் நம்மோடு இல்லையே என்று மக்கள் எண்ணக்கூடிய நிலை உருவாகிவிடும். அதனால், மக்களுடைய பாதுகாப்புக்காக சில விதிகளை தளர்த்திக் கொள்வதில் தவறில்லை.

கடைகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் எல்லாம் மூடப்பட்டிருக்கின்றன என்று அறிவித்து கொண்டிருக்கிறோம். சென்னையில் பாண்டிபஜார், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை அங்கெல்லாம் முழுமையாக அனைத்துமே மூடப்பட்டிருக்கின்றன. கடைகளை மூட ஒரு அளவுகோல் வைத்திருக்கிறோமோ? அளவுகோலை வைத்து கடைப்பிடித்தால்தான் முறைப்படுத்தப்படும். சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மூடப்படவில்லை என்று முதல்-அமைச்சரே சொல்லி இருக்கிறார். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக அங்காங்கே மூடப்படும் சூழ்நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது.

இதனால் தினக்கூலிகள், அன்றாடம் காய்ச்சிகள், அமைப்புசாரா தொழிலாளர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் கேரளாவில் கடைப்பிடிப்பது போல, ரே‌‌ஷன் பொருட்களை நேரடியாக வீட்டிற்கு சென்று கொடுக்கும் வசதியை அரசு ஏற்படுத்தி தரவேண்டும். இதற்கு நீங்கள் கேரளாவைப் போல் இங்கே பாதிப்புகள் இல்லை என்று சொல்வீர்கள்; நான் ஏற்றுக்கொள்கிறேன்.

குறிப்பாக, விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கிட, அரசே நேரில் சென்று கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். சிறு, குறு, நடுத்தர தொழில்கள் செயல்படாவிட்டாலும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இந்த மாதச் சம்பளத்தை நிறுத்தாமல் வழங்கிட வேண்டும் அதற்கு இந்த அரசு உத்தரவாதம் வழங்க வேண்டும்.

நம் மாநிலம் பிற மாநிலங்களைப் போல பாதிக்கப்படவில்லை என்பது உள்ளபடியே மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது?. அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தனிமைப்படுத்தக்கூடிய மையங்களை மாவட்ட அளவில் அமைப்பது, அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்துவது, தனியார் மருத்துவமனைகளை தயார்படுத்துவது, முகக்கவசங்கள், மருந்துகளை கொள்முதல் செய்வது போன்வற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதேபோல், சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் வலியுறுத்தினார். அப்போது அவர், ‘இங்கே இருக்கும் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் எல்லோருக்குமே 60 வயது கடந்து விட்டது, எனக்கும் கடந்து விட்டது. எனவே எல்லாவற்றையும் எண்ணி பார்த்து சட்டசபை கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும்’ என்றார்.

இவ்வாறு அவர் பேசியதும் அவையில் சிரிப்பலை எழுந்தது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan