கொரோனாவின் பிறப்பிடமான உகானில் 2-வது நாளாக புதிய நோயாளிகள் இல்லை

கொரோனாவின் பிறப்பிடமான உகானில் 2-வது நாளாக புதிய நோயாளிகள் இல்லை

உகான் நகரம் மட்டுமின்றி ஒட்டுமொத்த சீனாவிலும் 2 நாட்களாக புதிய நோயாளிகள் யாரும் இல்லை என அரசு அறிவித்து உள்ளது.

பீஜிங்:

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் பிறப்பிடம் சீனாவின் உகான் நகராகும். சீனாவில் வைரஸ் தொற்றுக்கு ஆளான மற்றும் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த நகரை உள்ளடக்கிய ஹுபெய் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

தற்போது சீன அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளின் பலனாக இந்த நகரில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு நேற்று முன்தினம் நிலவரப்படி தொடர்ந்து 2-வது நாளாக புதிதாக யாரும் இந்த தொற்றுக்கு ஆளாகவில்லை. எனினும் உகானைச் சேர்ந்த 50,005 பேர் தொடர்ந்து கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

உகான் நகரம் மட்டுமின்றி ஒட்டுமொத்த சீனாவிலும் 2 நாட்களாக புதிய நோயாளிகள் யாரும் இல்லை என அரசு அறிவித்து உள்ளது. அங்கு மேலும் 3 பேர் இந்த நோய்க்கு உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த சாவு எண்ணிக்கை 3,248 ஆக உயர்ந்து விட்டது.

இப்படி உள்நாட்டு மக்கள் யாரும் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகாத நிலையில், வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு வருபவர்கள் வைரஸ் தொற்றுடன் வரும் விவகாரம் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளது. அப்படி வந்தவர்களில் 39 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதன்மூலம் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் வைரஸ் தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 228 ஆக அதிகரித்து உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan