சட்டசபை நடந்தால்தான் மக்களின் அச்ச உணர்வை போக்க முடியும் – ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் பதில்

சட்டசபை நடந்தால்தான் மக்களின் அச்ச உணர்வை போக்க முடியும் – ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் பதில்

சட்டசபை நடந்தால் தான் மக்களின் அச்ச உணர்வை போக்க முடியும் என்று மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

சென்னை:

வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு தான் கொரோனா பாதிப்பு இருக்கிறது என்றும், தமிழ்நாட்டில் இருந்து ஒருவருக்கு கூட இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், சட்டசபை நடந்தால் தான் மக்களின் அச்ச உணர்வை போக்க முடியும் என்று மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருவதால் நெருக்கடியான நேரத்தில் மக்களுடன் நிற்க சட்டசபை கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

இங்கே பேசிய எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எப்படி மேற்கொள்ள வேண்டும் என்ற விவரங்களையும் இங்கே தெரிவித்திருக்கிறார்கள். அரசு நிலைப்பாட்டை இங்கே நான் குறிப்பிட விரும்புகின்றேன். எனது தலைமையிலான மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், இதுவரை 4 முறை கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தி தினசரி நிலவரங்களை அறிந்து, பல்வேறு உத்தரவுகளை உடனுக்குடன் வழங்கி வருகின்றது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து பல்வேறு துறைகளுக்கு 60 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர், சட்டசபையை ஒத்திவைக்க வேண்டுமென்று கோரினார். சட்டசபை நடைபெற்று கொண்டு இருந்தால் தான் நாட்டினுடைய நிலைமை மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும். அதற்காகத் தான் சட்டசபை கூடுகிறது. ஆகவே, மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளை இங்கே தான் விவாதிக்க முடியும். நீங்கள் கூட என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்ற விவரத்தை சொல்லுகின்றீர்கள் என்றால், சட்டசபை நடைபெற்று கொண்டு இருக்கின்ற காரணத்தினால் தான் நீங்கள் இங்கே தெரிவிக்கின்றீர்கள். அதற்குண்டான நடவடிக்கைகள் நாங்கள் எடுக்கின்றோம்.

ஆகவே, மக்கள் பணியாற்றுவதற்காகத் தான் நம்மை தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பி இருக்கின்றார்களே தவிர, நாம் இங்கே கூடியதால் நோய் ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை. ஏன் என்று சொன்னால், இது வெளிநாட்டில் இருந்தும், வெளி மாநிலத்தில் இருந்து தான் இங்கே இந்த தொற்று நோய் நம்முடைய பகுதிக்கு வருகின்ற காரணத்தினால், அதை தடுக்கின்ற பணியிலே அரசு முழு மூச்சுடன் ஈடுபட்டு கொண்டு இருக்கிறது.

சிறு தொழில் பாதிக்கப்பட்டு இருக்கின்றது என்று சொன்னீர்கள். எந்த சிறு தொழிற்சாலைகளும் மூடப்படவில்லை. இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது. அதில் அச்சப்பட வேண்டியதில்லை.

வெளிநாட்டிலிருந்தும், வெளி மாநிலத்திலிருந்தும் வந்தவர்களை பரிசோதனை செய்து, அந்த பரிசோதனையின் அடிப்படையிலே அவர்களுக்கு நோய் கண்டறியப்பட்டால், அவர்களை தனிமைப்படுத்தி, அதற்குண்டான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதில்கூட ஒருவருக்கு பூரண குணமாகி வீடு திரும்பி இருக்கின்றார்.

அமெரிக்கா, இத்தாலி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தினால் தான் அந்த நோய் அங்கு பரவி விட்டது. அதற்கு பிறகு தான் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் அப்படி அல்ல. தமிழகத்தில் இருக்கின்ற யாருக்கும் வரவில்லை. வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்குதான் இந்த நோய் இருக்கிறது. இங்கே இருப்பவர்களுக்கு இல்லை. ஆகவே நாம் உணர்வு பூர்வமாக நம்முடைய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டிலிலே பணிபுரிய சென்றவர்கள் ஏதாவது நோய்வாய் பட்டுவிட்டால் அவர்களுடைய பெற்றோர்கள் அச்சப்படுகின்றார்கள்.

அங்கே படிக்கின்ற மாணவர்களுக்கும், பணியில் இருக்கின்றவர்களும் அச்சப்படுகின்றார்கள். அது இயற்கை தான். ஆகவே, தனது தாய்நாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற விருப்பத்தின் பேரிலே அழைத்து வரப்படுகிறார்கள். அப்படி அழைத்து வரப்படுபவர்களுக்குத்தான் அந்த நாட்டில் நோய் தொற்று இருக்கின்ற காரணத்தினாலே, இங்கே பரிசோதனையிலே கண்டுபிடித்து, தனிமைப்படுத்தப்பட்டு, குணப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கின்றோமே தவிர, தமிழ்நாட்டில் இருந்து ஒருவருக்கு கூட இந்த கொரோனா வைரஸ் ஏற்படவில்லை என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து கொள்கிறேன்.

நான் கூறியது போல, ரெயில், விமானம், பஸ் ஆகியவற்றின் மூலம் வருகின்றவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. மற்ற மாநிலங்களிலிருந்து நமது மாநிலத்திற்கு வருகின்ற போது, நம்முடைய மாநில எல்லையிலே தடுத்து நிறுத்தி, பரிசோதனை செய்து, அந்த பரிசோதனையிலே ஏதாவது நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்களை தனிமை வார்டில் சேர்க்கப்பட்டு, தனிமைப் படுத்தப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சட்டசபை கூட்டம் நடைபெற்று கொண்டு இருந்தால் தான், மக்களுடைய அச்ச உணர்வை போக்க முடியும். இதன்மூலமாக செய்தி வெளியே வரும், அரசாங்கம் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கிறது என்ற செய்தி வெளியே போகும். அதேபோல், மக்களிடத்தில் இருக்கின்ற பிரச்சினைகள் எதிர்க்கட்சி மூலமாக அரசிற்கு கொண்டு வந்து, அரசு அதற்குரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan