கொரோனா தாக்கம் எதிரொலி… 31ம் தேதியுடன் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு

கொரோனா தாக்கம் எதிரொலி… 31ம் தேதியுடன் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு

தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக சட்டசபை கூட்டத்தொடர் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.

சென்னை:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. கொரோனா பரவாமல் தடுக்க பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக சட்டசபை கூட்டத் தொடரை ஒத்திவைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தன. ஆனால், சட்டமன்ற கூட்டத் தொடர் தொடர்ந்து நடைபெற்றால்தான் மக்கள் அச்ச உணர்வின்றி இருப்பார்கள் என்றும், மக்களுக்கு தகவல்கள் சென்றடையும் என்றும் முதலமைச்சர் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடரை முன்கூட்டியே மார்ச் 31-ம் தேதியே நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் தனபால் வெளியிட்டார். 31-ம் தேதி வரை காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் கூட்டத் தொடர் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 9ம் தேதி வரை சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக முன்கூட்டியே கூட்டத்தொடரை நிறைவு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan