பாராளுமன்றதொடரில் பங்கேற்க வேண்டாம் – திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு கட்சி மேலிடம் அறிவுறுத்தல்

பாராளுமன்றதொடரில் பங்கேற்க வேண்டாம் – திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு கட்சி மேலிடம் அறிவுறுத்தல்

பாராளுமன்ற தொடரில் பங்கேற்க வேண்டாம் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி வருவதால் கூட்டம் கூடுவதை தடுப்பதற்கு அனைத்து தரப்பினரும் முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் பாராளுமன்றகூட்டத்தில் பங்கேற்காமல் தொகுதிகளுக்கு திரும்புமாறு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு கட்சித்தலைமை அறிவுறுத்தி உள்ளது.

மேலும் பாராளுமன்றகூட்டத்தொடரையும் இன்றுடன் (திங்கட்கிழமை) முடித்து விடுமாறு மத்திய அரசுக்கும் அந்த கட்சி வேண்டுகோள் விடுத்து உள்ளது. இது தொடர்பாக இரு அவைகளின் தலைவர்களுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான டெரிக் ஓபிரையன் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்குமாறும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்குமாறும் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். மாநிலங்களவையில் 44 சதவீதம், மக்களவையில் 22 சதவீதம் எம்.பி.க்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். எம்.பி.க்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பாராளுமன்றவளாகத்துக்கு வருகின்றனர். இது மிகப்பெரும் ஆபத்தாகும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 22 மக்களவை உறுப்பினர்கள் உள்பட 35 எம்.பி.க்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan