தமிழகத்தில் 144 தடை உத்தரவின் முழு விவரம் – அரசாணை வெளியீடு

தமிழகத்தில் 144 தடை உத்தரவின் முழு விவரம் – அரசாணை வெளியீடு

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டு உள்ளது.

சென்னை:

180க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சீனா, ஈரான், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், தென்கொரியா ஆகிய நாடுகள் அதிகம் இலக்காகி உள்ளன.

இந்தியாவில் பலி எண்ணிக்கை 8 ஆக உள்ளது.  கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

அவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அரசு தரப்பில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இதன்படி, தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ந்தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்பட்டது.

இதேபோன்று, தமிழகத்தில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  கொரோனா பற்றிய அறிவுறுத்தலை மீறி மக்கள் வெளியே நடமாடுவதால் இந்த அறிவிப்பு வெளியானது.  இதனை முன்னிட்டு கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் நாளை மாலை 6 மணி முதல் அமலுக்கு வருகின்றன.

* இதனால் பால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தடையிருக்காது.

* வங்கிகள், ஏ.டி.எம்.கள் வழக்கம்போல் செயல்படும்.

* மருந்து உற்பத்தி, விநியோகம், மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.

* ஆம்புலன்ஸ், விமான நிலையம், மருத்துவமனை செல்லும் டாக்சி, இறுதிச்சடங்கு வாகனத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

* ஓட்டல்களில் பார்சல் வாங்க அனுமதியுண்டு.  ஆனால் அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை.

* அனைத்து கல்லூரி, வேலை வாய்ப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன.

* நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.

* ஊழியர்களை அலுவலகம் அழைத்து செல்லவும், பின்னர் பணி முடிந்து வீட்டுக்கு அழைத்து செல்லவும் உதவும் பொதுபோக்குவரத்து வாகனங்கள் இயங்க அனுமதி வழங்கப்படும்.

* அத்தியாவசிய சேவைகள், அரசு பணிகளுக்கு மட்டும் அரசு வாகனங்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.

* கடந்த 16ந்தேதிக்கு முன் திட்டமிடப்பட்ட திருமணங்கள் மட்டுமே, மண்டபங்களில் நடக்க வேண்டும்.  திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 30 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

* ஆவின் பால் விற்பனையாளர்கள், அம்மா உணவகங்கள் செயல்படும்.

* அத்தியாவசிய கட்டிட பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.

* தகவல் தொழில்நுட்ப துறை (ஐ.டி.) பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும்.

* பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்சி ஆகியவை இயங்காது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் நாளை மாலை 6 மணி முதல் அமலில் இருக்கும்.  இந்த நடைமுறை வரும் ஏப்ரல் 1ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.  இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan