Press "Enter" to skip to content

கொரோனாவை தடுக்க வரும் தடுப்பூசி ‘பிட்கோவேக்’

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பிட்ஸ்பர்க் நகரில் அமைந்துள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரியின் விஞ்ஞானிகள் உலக மக்கள் அனைவரின் வயிற்றில் பால் வார்க்கிற ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.

கண்களுக்குத் தெரிகிற எதிரிகளை விட கண்களுக்குத் தெரியாத எதிரிகள்தான் ஆபத்தானவர்கள் என்று சொல்வது உண்டு.

அது கொரோனா வைரசை பொறுத்தமட்டில் 100 சதவீதம் உண்மை. அதனால்தான் இந்த உலகமே அதிர்ந்து போய் கிடக்கிறது.

இந்த கொரோனா வைரஸ் என்ற ராட்சத பேய், தாக்க வருவதற்கு முன் தற்காத்துக்கொள்வதற்கு தடுப்பூசி எப்போது வரும் என்று காத்துக்கிடக்கிறது.

இந்த நிலையில்தான் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பிட்ஸ்பர்க் நகரில் அமைந்துள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரியின் விஞ்ஞானிகள் உலக மக்கள் அனைவரின் வயிற்றில் பால் வார்க்கிற ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.

கொரோனா வைரசை போன்றதொரு வைரசைப் பற்றி ஆய்வு நடத்திய நிலையில், இந்த கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து இருக்கிறோம் என்பதுதான் அவர்களின் அறிவிப்பு.

கொரோனா வைரஸ் பரவலை தடுத்து நிறுத்துகிற வகையில், ஒரு புதிய தடுப்பூசியை விரைவாக வெளியிட முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இந்த தடுப்பூசி விரல் நுனி அளவிலானது. அதில் சர்க்கரை மற்றும் புரதத்தால் ஆன நுண்ணிய ஊசி இருக்கும்.

இதுதான் கோடானுகோடி மக்களை கொரோனா வைரஸ் பரவுவதில் இருந்து காக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய தகவல்கள், பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம் அமைந்துள்ள பென்சில்வேனியா மக்களுக்கு முதலில் நிம்மதி தருவதாக இருக்கிறது. ஏனெனில் அங்கு 1,500-க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தாக்கி இருக்கிறது. 100-க்கும் அதிகமானோரை பலியும் கொண்டிருக்கிறது.

இந்த தடுப்பூசியை தற்போது எலிகளுக்கு செலுத்தி விஞ்ஞானிகள் பரிசோதித்து இருக்கிறார்கள். இது கொரோனா வைரசை வீழ்த்துவதற்கான ஆன்டிபாடிகளை (நோய் எதிர்ப்பு பொருள்) வழங்கி உள்ளது. ஆனாலும் எலிகள் நீண்ட கால சோதனைகளுக்கு இன்னும் உட்படுத்தப்படவில்லை. அது மட்டுமல்ல, இந்த தடுப்பூசியின் பக்க விளைவுகள் என்னென்ன என்பதுவும் இனிதான் கண்டறியப்பட வேண்டும்.

இந்த தடுப்பூசியை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள், இதற்கு முன்பாக சார்ஸ், மெர்ஸ் போன்ற கொரோனா குடும்ப வைரஸ்கள் பற்றி ஆராய்ச்சி நடத்தி வந்ததுதான், இப்போது கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு வழிநடத்தி இருக்கிறது என்கிறார்கள்.

அவர்களில் ஒருவரான பேராசிரியர் ஆண்ட்ரியா கம்பாட்டோ கூறும்போது, “சார்ஸ் கொவ்-2 உடன் நெருங்கிய தொடர்புடைய இந்த இரு வைரஸ்களும், கொரோனா வைரசை வீழ்த்துவதற்கு அந்த வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்கு ஸ்பைக் புரதம் என்றழைக்கப்படுகிற புரதச்சத்து முக்கியம் என எங்களுக்கு உணர்த்தி உள்ளது” என்கிறார்.

ஆனால் தடுப்பூசியை பொறுத்தமட்டில் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று, இது ஒரு வைரஸ் தொற்று தாக்காமல் தடுக்க உதவும். அதே நேரத்தில் தற்போது பரவிக் கொண்டிருப்பதை தடுத்து நிறுத்த முடியாது என்று விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.

ஆனால் ஒரு உள்நாட்டுபோரைப் போன்று அல்லது அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாதிகள் அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மைய இரட்டை கோபுர கட்டிடம் மீதும் விமானங்களை மோதி நடத்திய தாக்குதல் போன்று வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ள கொரோனா வைரஸ் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு தடுப்பூசி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்க்கான இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த டாக்டர் அந்தோணி பாசி, உலக நாடுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுகள் விலக்கிக்கொள்ளப்படுகிறபோது, கொரோனா வைரஸ் அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக்கூறி எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். அப்போது இந்த தடுப்பூசி, கொரோனா வைரசுக்கு எதிராக சண்டையிட உதவும் என்று சொல்கிறார்கள்.

பிட்கோவேக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, கிளினிக்கல் டிரையல் என்று அழைக்கப்படுகிற மருத்துவ பரிசோதனைகளை எல்லாம் முடித்துக்கொண்டு சந்தைக்கு வர இன்னும் 18 மாதங்கள் ஆகலாம் என்கிறார்கள்.

அதற்கு முன்னால் தற்போது சியாட்டில் நகரில் மார்ச் மாதம் பரிசோதிக்கத் தொடங்கியுள்ள தடுப்பூசி வந்து விடலாம் எனவும் சொல்லப்படுகிறது. ஆனாலும் எதுவும் உடனடியாக வந்து விடாது என்பதுதான் நிதர்சனம்.

எதற்காக இந்த தாமதம் என்று கேட்கிறீர்களா?

தடுப்பூசி இன்னும் கடந்து வர வேண்டிய நீண்ட பாதை இதுதான்-

* இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதித்துப் பார்க்கலாம் என்ற நிலையை எட்ட வேண்டும். அதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் ஒப்புதலைப்பெற வேண்டும்.

* அடுத்த சில மாதங்களில் இந்த கிளினிக்கல் டிரையல் சோதனையை தொடங்கி விட முடியும்.

* இது ஆரம்ப கட்டத்தில் அளவிடக்கூடிய அளவில்தான் (குறைந்த அளவில்) இருக்கும்.

* தடுப்பூசியைப் பொறுத்தமட்டில் ஆரம்ப காலக்கட்டத்தில் அளவிடும் தன்மை பற்றி நாம் கவனிக்க தேவையில்லை என்பது பேராசிரியர் ஆண்ட்ரியா கம்பாட்டோ கருத்தாக உள்ளது.

* எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை என்கிற பட்சத்தில் குறைந்தது ஒரு வருட காலம் சோதித்துப் பார்க்க வேண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

எப்படிப்பார்த்தாலும் கண்களுக்கு எட்டுகிற தூரத்தில் தடுப்பூசி இல்லை.

அமெரிக்க தேர்தலுக்கு முன்னதாக (நவம்பர்-3) தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட வேண்டும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் துடிக்கிறார்.

அவர் துடிப்பு செல்லுபடியாகுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், ஏனெனில், தடுப்பூசிக்கு தெரியாது டிரம்பின் துடிப்பும், அவசரமும்!

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »