‘சிக்கிம் எங்க ஊர் இல்லையா’ சீன ராணுவ அதிகாரியின் மூக்கை உடைத்த இந்திய வீரர்

‘சிக்கிம் எங்க ஊர் இல்லையா’ சீன ராணுவ அதிகாரியின் மூக்கை உடைத்த இந்திய வீரர்

சிக்கிம் உங்கள் ஊர் இல்லை என கூறிய சீன ராணுவ அதிகாரியின் மூக்கை இந்திய ராணுவ வீரர் உடைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காங்டாக்:

சிக்கிம் மாநிலம் மஹுதங் பகுதி நாகு லா செக்டாரில் அமைந்துள்ள எல்லையில் கடந்த வாரம் இந்திய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு ரோந்து பணிக்காக வந்த சீன படையினர் இது தங்கள் நாட்டிற்கு சொந்தமான பகுதி என கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்திய-சீன பாதுகாப்பு படையினர் மாறிமாறி கற்களை வீசி தாக்கிகொண்டனர். மேலும், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக்கொண்டு சண்டையில் ஈடுபட்டனர். 

இந்த சண்டையில் 150 பேர் ஈடுபட்டதாகவும்  அதில் 4 இந்திய வீரர்களும், 7 சீன வீரர்களும் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதனால் உடனடியாக இந்திய படைகளும், சீன படைகளும் அங்கு விரைந்து சென்றது. ஆகையால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு நாடுகளின் ராணுவத்தை சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு இரு தரப்பினரும் அமைதியான முறையில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள சமரசம் செய்யப்பட்டது.

இதற்கிடையில், இந்தியா-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலின் போது சிக்கிம் உங்கள் ஊர் இல்லை என கூறிய சீன ராணுவ அதிகாரியின் மூக்கை இளம் இந்திய ராணுவ வீரர் உடைத்ததாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இளம் இந்திய ராணுவ வீரர் தனது சக வீரர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன்  நாகு லா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். 

அப்போது அங்கு தங்கள் நாட்டு வீரர்களுடன் வந்த ஒரு சீன ராணுவ அதிகாரி ”இது (சிக்கிம்) ஒன்றும் உங்கள் நிலப்பரப்பு அல்ல, இது ஒன்றும் இந்திய எல்லை அல்ல… ஆகையால் உடனடியாக வெளியேறுங்கள் என சத்தமாக கூறினார். மேலும், இந்திய ராணுவ உயர் அதிகாரியை நோக்கி மிரட்டும் விதமாக வேகமாக நடந்து வந்தார். 

அப்போது இந்திய அதிகாரியுடன் பணியில் இருந்த இளம் ராணுவ வீரர் ஒருவர், ” என்ன… சிக்கிம் எங்கள் நிலம் கிடையாதா?  என சத்தமாக கூறினார்.

மேலும், இந்திய அதிகாரியை நோக்கி வேகமாக நடந்து வந்த சீன ராணுவ அதிகாரியை இடைமறிந்த அந்த வீரர் அவரின் முகத்தில் வேகமாக குத்தினார். இதில் சீன அதிகாரியின் மூக்கு உடைந்து ரத்தம் சொட்டச்சொட்ட கீழே சரிந்து விழுந்தார். 

இதனால் அதிர்ச்சியடைந்த சக இந்திய வீரர்கள் அந்த இளம் வீரரை கட்டுப்படுத்தினர். மேலும், உயர் அதிகாரிகளும் அங்கு விரைந்தனர். இதனால், அந்த இடத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோப்பு படம்

இந்த பிரச்சனை இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு பின் சுமுகமாக தீர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சீன அதிகாரியின் மூக்கை உடைத்த அந்த இளம் ராணுவ வீரரின் தாத்தா இந்திய விமானப்படையில் பணியாற்றியுள்ளார் என்றும் வீரரின் தந்தை இந்திய ராணுவத்தில் கர்னலாக பணியாற்றியுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan