வக்கீல்கள் கருப்பு உடை அணிவதில் இருந்து விலக்கு – சுப்ரீம் நீதிமன்றம் அறிவிப்பு

வக்கீல்கள் கருப்பு உடை அணிவதில் இருந்து விலக்கு – சுப்ரீம் நீதிமன்றம் அறிவிப்பு

வக்கீல்கள் வழக்கமாக அணியும் கருப்பு கவுன் மற்றும் கருப்பு கோட்டு அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளில் ஆஜராகும் போது வக்கீல் கருப்பு கோட்டு, கருப்பு கவுன், வெள்ளை கழுத்து பட்டை ஆகியவற்றை அணிவது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பிறப்பித்த உத்தரவின் பேரில் சுப்ரீம் கோர்ட்டு செகரட்டரி ஜெனரல் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது;-

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையிலும் மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையிலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைகளில் ஆஜராகும் வக்கீல்கள் இனி சாதாரணமான வெள்ளை சட்டை, வெள்ளை சல்வார் கமீஸ் அல்லது வெள்ளை புடவை மற்றும் வெள்ளை கழுத்துப் பட்டையை தற்போதைய சுகாதார சூழ்நிலை உள்ளவரை அல்லது அடுத்த உத்தரவு வரை அணிந்து கொண்டு காணொலி மூலம் விசாரணையில் கலந்து கொள்ளலாம். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

இவ்வாறு இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நேற்று காணொலி மூலம் நடைபெற்ற விசாரணை ஒன்றில் பங்கேற்ற மூத்த வக்கீல் கபில் சிபலிடம், தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, வக்கீல்கள் வழக்கமாக அணியும் கருப்பு கவுன் மற்றும் கருப்பு கோட்டு ஆகியவற்றால் வைரஸ் எளிதாக தொற்றும் ஆபத்து உள்ளதாகவும் தற்போதைக்கு இந்த மரபை சற்று நிறுத்தி வைக்கலாம் என்றும் கருத்து தெரிவித்ததாகவும் அதனை தொடர்ந்து பிறப்பித்த உத்தரவில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan