இங்கிலாந்தில் கொரோனாவுக்கு புகழ்பெற்ற இந்திய பெண் மருத்துவ நிபுணர் பலி

இங்கிலாந்தில் கொரோனாவுக்கு புகழ்பெற்ற இந்திய பெண் மருத்துவ நிபுணர் பலி

இங்கிலாந்தில் கொரோனா வைரசுக்கு புகழ்பெற்ற இந்திய பெண் மருத்துவ நிபுணர் பலி ஆனார். டாக்டர் பூர்ணிமா நாயரையும் சேர்த்து இங்கிலாந்தில் கொரோனா வைரசுக்கு பலியான டாக்டர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

லண்டன்:

இங்கிலாந்து நாட்டில் கவுண்டி டர்ஹாமில் உள்ள பிஷப் ஆக்லாந்து ஸ்டேஷன் வியூ மெடிக்கல் சென்டரில் பணியாற்றி வந்தவர் டாக்டர் பூர்ணிமா நாயர் (வயது 55). இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். புகழ் பெற்ற மருத்துவ நிபுணர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்த்து முன்வரிசையில் நின்று போராடுகிற டாக்டர்களையும், நர்சுகளையும், சுகாதார பணியாளர்களையும் விட்டு வைப்பதில்லை. அந்த வகையில், டாக்டர் பூர்ணிமா நாயரையும் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி கொரோனா வைரஸ் தாக்கியது.

அதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக ஸ்டாக்டன் ஆன் டீஸ் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரைக் காப்பாற்றுவதற்கு டாக்டர்கள் கடுமையாக போராடினார்கள்.

மார்ச் 27-ந் தேதி முதல் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நீண்ட போராட்டத்துக்கு பின்னர் அவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

அவருக்கு தாயார், கணவர், ஒரு மகன் உள்ளனர். டாக்டர் பூர்ணிமா நாயரையும் சேர்த்து இங்கிலாந்தில் கொரோனா வைரசுக்கு பலியான டாக்டர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவர் பணியாற்றிய பிஷப் ஆக்லாந்து ஸ்டேஷன் வியூ மெடிக்கல் சென்டர் விடுத்துள்ள உருக்கமான அறிக்கை வருமாறு:-

அனைவரால் நேசிக்கப்பட்டவரும், மதிப்புமிக்கவருமான டாக்டர் பூர்ணிமா நாயர் இறந்து விட்டார் என்பதை அறிவிப்பதில் மிகவும் வருந்துகிறோம்.

டாக்டர் பூர்ணிமா நாயர் நீண்ட காலமாக கொரோனா வைரஸ் தாக்கிய நிலையில் மிகுந்த மன வலிமையுடன் உயிருக்கு போராடி வந்தார். ஆனாலும் அது பலனற்று பேரழிவை ஏற்படுத்தி விட்டது. இதற்காக வருத்தப்படுகிறோம். எங்கள் நினைவுகளிலும், பிரார்த்தனைகளிலும் டாக்டர் பூர்ணிமா நாயர் எப்போதும் இருப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டாக்டர் பூர்ணிமா நாயர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவரது உறவினர்களும், நண்பர்களும், நோயாளிகளும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றனர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan