ரூ.5,000 கோடியில் சாலையோர வியாபாரிகளுக்கான சிறப்பு கடனுதவி திட்டம்: நிர்மலா சீதாராமன்

ரூ.5,000 கோடியில் சாலையோர வியாபாரிகளுக்கான சிறப்பு கடனுதவி திட்டம்: நிர்மலா சீதாராமன்

சாலையோர வியாபாரிகள் பயன்பெறும் வகையில் 5 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்றுமுன்தினம் இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும்போது, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.

அதன்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்றிலிருந்து ஒவ்வொரு துறைக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இன்று புலம்பெயர் தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், சிறு வணிகர்கள், சிறு விவசாயிகள் உள்பட 9 அறிவிப்புகளை வெளியிட்டார்.

சாலையோர வியாபாரிகளுக்கான சிறப்பு கடனுதவி திட்டம் குறித்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

கொரோனா வைரஸ் தாக்கம் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பெருமளவு பாதித்துள்ளது. அவர்கள் கடனுதவி பெற ஏதுவாக மத்திய அரசு சிறப்பு கடன் திட்டம் ஒன்றை ஒரு மாத காலத்துக்குள் செயல்படுத்தும். முதலில் இயக்க முதலீடாக 10 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும்.

மின்னணு முறையில் பணம் செலுத்துவன் மூலம் வெகுமதிகள் அளித்து ஊக்கப்படுத்தப்படும். உரிய காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு மூலதனக் கடன் கிடைக்க வழிவகை செய்யப்படும். 50 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு உதவி செய்யப்படும். இதற்காக 5 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படும்.

இவ்வா நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan