ஒன்றிரண்டு கொரோனா பாதிப்பு இருந்தால் அலுவலகத்தை மூட வேண்டியதில்லை- மத்திய அரசு

ஒன்றிரண்டு கொரோனா பாதிப்பு இருந்தால் அலுவலகத்தை மூட வேண்டியதில்லை- மத்திய அரசு

பணியிடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது. புதிய நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பல்வேறு தொழில்கள் தொடங்க நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அலுவலகங்களில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

அதில், ஒரு அலுவலகத்தில் ஒன்றிரண்டு கொரோனா பாதிப்பு இருந்தால் முழுமையாக அலுவலகத்தை மூட வேண்டியதில்லை என்றும், கிருமிநாசினி தெளித்துவிட்டு பணிகளைத் தொடரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

‘பெரிய அளவில் பாதிப்பு இருந்தால், கிருமிநீக்கம் செய்யப்பட்டு 48 மணி நேரத்திற்கு அலுவலகத்தை மூட வேண்டும். கட்டிடம் போதுமான அளவு கிருமி நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் பணியை தொடங்க ஏற்றதாக அறிவிக்கப்படும் வரை, அனைத்து ஊழியர்களும் வீட்டிலிருந்து வேலை செய்யலாம். 

ஊழியர்கள் காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கப்பட்டால் அலுவலகம் செல்லக்கூடாது. உள்ளூர் சுகாதார அதிகாரிகளிடமிருந்து மருத்துவ ஆலோசனை பெறவேண்டும். கொரோனா உறுதி செய்யப்பட்டாலோ, சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தினாலோ அவர்கள் தங்கள் அலுவலக அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்’ என்றும் சுகாதாரத்துறை கூறி உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan