தீவிரமடையும் ‘அம்பன் புயல்’ – மேற்கு வங்காளத்தில் அடைமழை (கனமழை)

தீவிரமடையும் ‘அம்பன் புயல்’ – மேற்கு வங்காளத்தில் அடைமழை (கனமழை)

அம்பன் புயல் நாளை கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

கொல்கத்தா:

வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. ‘அம்பன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், சூப்பர் புயலாக வலுப்பெற்று வருகிறது.

சூப்பர் புயலாக மாறும் அம்பன் புயல், மேற்கு வங்காளத்தின் சாகர் தீவுகள் மற்றும் வங்காளதேசத்தின் ஹதியா தீவுகள் இடையே நாளை அல்லது மாலையில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனாலும், புயல் கரையை கடப்பதற்கு முன்பு ஒடிசா, மேற்கு வங்காளம், சிக்கிம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் பலத்த புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

குறிப்பாக மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் இந்த புயல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று 150 முதல் 160 கீ.மீ. வரை வேகமாக வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

புயல் பாதிப்பை ஏற்படுத்தும் பகுதிகளில் நிலையை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். கடலோர கிராமங்களில் பேரிடர் மீட்புக் குழுவினர் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர். 

இந்நிலையில், வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள அம்பன் புயல் தற்போது தீவிரமடையத்தொடங்கியுள்ளது. குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் புயல் காரணமாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

அம்மாநிலத்தின் வடக்கு பர்கானா மாவட்டத்தில் தற்போது பலத்த சூறைகாற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

புயல் நாளை கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மேற்கு வங்காளத்தில் கனமழை பெய்து வருவதால் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan