கரை கடக்க தொடங்கியது அம்பன் புயல்- சூறைக்காற்றுடன் அடைமழை (கனமழை)

கரை கடக்க தொடங்கியது அம்பன் புயல்- சூறைக்காற்றுடன் அடைமழை (கனமழை)

மேற்கு வங்கத்திற்கும், வங்கதேசத்திற்கும் இடையே அம்பன் புயல் கரை கடக்கத் தொடங்கியதால், அப்பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்கிறது.

கொல்கத்தா:

வங்கக்கடலில் உருவான அம்பன் புயல், சூப்பர் புயலாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு நோக்கி நகரத் தொடங்கியது. நேற்று மேற்கு வங்காளத்தை நெருங்கியபோது அதி தீவிர புயலாக வலுவிழந்தது. இன்று காலை மேலும் நகர்ந்து, பூரி – கொல்கத்தா இடையே வங்கக் கடலில் மையம் கொண்டிருந்தது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது.

இந்நிலையில், அம்பன் புயல் மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து, தீவிர புயலாக வலுவிழந்து, இன்று பிற்பகல் கரை கடக்கத் தொடங்கியது. மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவுகள் பிற்பகல் 2.30 மணிக்கு கரை கடக்கத் தொடங்கியது. கரைகடக்கும் நிகழ்வு கிட்டத்தட்ட 4 மணி நேரம்  நீடிக்கும் என்றும், அதன்பின்னர் புயல் வலுவிழக்கும் என்றும் வானிலை மையம் கூறி உள்ளது.

புயல் கரை கடக்கத் தொடங்கியதும் மணிக்கு 160 கிமீ முதல் 170 கிமீ வரை வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் மழையும் படிப்படியாக அதிகரித்தது. புயல் கரைகடந்த பிறகு,  வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து, கொல்கத்தாவுக்கு அருகில் செல்லக்கூடும், இதனால் பலத்த மழை பெய்து, நகரின் தாழ்வான பகுதிகளில் கடுமையான சேதம் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் வானிலை மையம் கூறியிருக்கிறது.

புயல் நெருங்கியதையடுத்து, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் 4.5 லட்சம் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan