கொரோனா வைரசை விட அம்பன் புயலால் சேதம் அதிகம் – மம்தா பானர்ஜி

கொரோனா வைரசை விட அம்பன் புயலால் சேதம் அதிகம் – மம்தா பானர்ஜி

கொரோனா வைரஸ் தாக்கத்தை விட அம்பன் புயலால் ஏற்பட்ட சேதங்கள் அதிகம் என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா:

தெற்கு வங்க கடலில் உருவான அம்பன் புயலானது நேற்று மதியம் 2.30 மணியளவில் மேற்கு வங்காளத்தின் திகா கடற்கரை மற்றும் வங்காளதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே சுந்தரவன காடுகள் பகுதியையொட்டி கரையை கடக்க தொடங்கியது.

தொடர்ந்து முன்பகுதி, நடுப்பகுதி பின்னர் கடைசி பகுதி என மாலை 3.30 மணி முதல் 5.30 மணிவரைக்குள் புயல் முழு அளவில் கரையை கடந்தது.

இந்த புயலால் மேற்கு வங்காளத்தில் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

கொல்கத்தா நகரில் உள்ள பல தெருக்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டன.  மரங்கள் வேரோடு சாய்ந்தன.  கடுமையான காற்று மற்றும் கனமழையால் வீடுகளும் சேதமடைந்தன. வாகனங்கள் மற்றும் வீடுகளின் மேற்கூரைகள் மீதும் மரங்கள் விழுந்து பெருத்த பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தன.

இரவு நேரம் சூழ்ந்த நிலையில் மழையால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். மின் வயர்கள் விழுந்து மின் வினியோகம் தடைபட்டது.

அம்பன் புயலால் மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாசில் 5,500 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டளது. அத்துடன் 2 பேர் பலியாகினர். அம்பன் புயலுக்கு வங்காளதேசத்தில் ஒருவர் பலியானார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தை விட அம்பன் புயலால் ஏற்பட்ட சேதங்கள் அதிகம் என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல் மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் புயலுக்கு 10 முதல் 12 பேர் வரை பலியாகி உள்ளனர். வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கனாஸ், ஹவுரா, கோல்கட்டா, மேற்கு மிட்னாபூர், கிழக்கு மிட்னாபூர், புருலி பங்குரா உள்ளிட்ட பகுதிகளில் புயல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

மாநிலத்தின் தெற்கு பகுதிகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் சேத மதிப்புகளை கணக்கிட 3 முதல் 4 நாட்கள் ஆகலாம்.

நாங்கள் ஒருபுறம் கொரோனாவுடன் போராடுகிறோம். மறுபுறம் புலம் பெயர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திரும்பி வருகிறார்கள். இவை அனைத்திற்கும் மேலாக தற்போது புயல். அம்பன் புயல் கொரோனாவை விட பேரழிவை ஏற்படுத்தும் என நான் நினைக்கிறேன். இச்சூழலில் மத்திய அரசு எங்களுடன் ஒத்துழைப்பு தந்து மக்களை காக்க வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan