சொந்த ஊர்களுக்கு அனுப்பாததால் வன்முறை- புலம்பெயர் தொழிலாளர்கள் 35 பேர் கைது

சொந்த ஊர்களுக்கு அனுப்பாததால் வன்முறை- புலம்பெயர் தொழிலாளர்கள் 35 பேர் கைது

சொந்த ஊர்களுக்கு அனுப்பாததால் குஜராத்தில் வன்முறையில் ஈடுபட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

அகமதாபாத்:

ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் அந்த ரெயில்கள் போதுமானதாக இல்லாததால் ஏராளமான தொழிலாளர்கள் பல நாட்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் வஸ்திரபூர் பகுதியில் உள்ள ஐஐஎம் வளாகத்தில் வேலை பார்த்த ஜார்க்கண்ட்  தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்கக் கோரி கடந்த திங்கட்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஜிஎம்டிசி மைதானத்தில் ஒன்றுதிரண்டனர். பின்னர் அங்கிருந்து இரும்பு கம்பி, பைப்புகள், உருட்டுக்கட்டைகளுடன் ஐஐஎம் பகுதி நோக்கி ஊர்வலமாக சென்றனர். தங்களை சொந்த மாநிலங்களுக்கு  உடனே அனுப்பி வைக்கும்படி கோஷமிட்டபடி சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்து வன்முறையில் ஈடுபட்டனர். சாலையில் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். கற்களை வீசி தாக்கினர். போலீசார்  மீதும் கற்களை வீசி தாக்கினர். ஐஐஎம் வளாகத்திற்குள் நுழைந்து, அலுவலக ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். 

இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியும், தடியடி நடத்தியும் தொழிலாளர்களை விரட்டியடித்தனர். தடியடியில் பல தொழிலாளர்கள் காயமடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

ஐஐஎம் புதிய வளாகத்தில் புதிய கல்வி நிலையம் மற்றும் விடுதிகளுக்கான கட்டுமானப் பணிகள் ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு பணியாற்றிய புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan