அமெரிக்க நாட்டில் கொரோனாவுக்கு இந்திய மருத்துவர் பலி

அமெரிக்க நாட்டில் கொரோனாவுக்கு இந்திய மருத்துவர் பலி

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இந்திய டாக்டர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலி ஆனார்.

நியூயார்க்:

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள சவுத் ரிச்மாண்ட் ஆஸ்பத்திரியில் உள்மருத்துவ நிபுணராக பணியாற்றி வந்தவர் டாக்டர் சுதீர் எஸ்.சவுகான். இந்தியர்.

இவர், நியூயார்க் ஜமைக்கா ஆஸ்பத்திரியிலும் உள் மருத்துவ நிபுணராகவும், இணை திட்ட இயக்குனராகவும் செயல்பட்டு வந்தார்.

இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்தது. கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி டாக்டர் சுதீர் எஸ்.சவுகான் கடந்த செவ்வாய்க்கிழமையன்று மரணம் அடைந்தார். இதை அமெரிக்க வாழ் இந்திய டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அவரது மகள் சினேஹ் சவுகான், “எனது தந்தை சுதீர் எஸ்.சவுகான் தனித்துவமானவர். கனிவானவர். மென்மையானவர். அவரது மறைவு எங்களை உலுக்கி உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் சுதீர் எஸ்.சவுகான், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜிஎஸ்யுஎம் மருத்துவ கல்லூரியில் படித்து 1972-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார். பின்னர் அவர் அமெரிக்கா சென்று ஜமைக்கா ஆஸ்பத்திரியில் உள்மருத்துவத்தில் மேற்படிப்பு படித்து தேறி அங்கேயே பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம்தான் நியூயார்க்கில் இந்தியாவை சேர்ந்த தந்தையும், மகளுமான டாக்டர் சத்யேந்தர் கன்னாவும், டாக்டர் பிரியா கன்னாவும் கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தனர்.

இதேபோன்று டாக்டர் அஜய் லோதா, அஞ்சனா சமத்தார், சுனில் மெஹ்ரா ஆகியோரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

சுய பாதுகாப்பு கருவிகள் வழங்கப்படுவதில்லை…

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கிற டாக்டர்களுக்கு பி.பி.இ. என்று அழைக்கப்படுகிற சுய பாதுகாப்பு கருவிகள் போதுமான அளவுக்கு வழங்கப்படுவதில்லை, இதனால் அவர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாவது அதிகரித்து வருவதாகவும், சிலர் பலியாகி வருவதாகவும் அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி டாக்டர்கள் சங்கம் கூறுகிறது.

அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த 80 ஆயிரம் பேர் டாக்டர்களாக உள்ளனர். அவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு முன்நின்று சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan