மாணவர் சேர்க்கை நடத்தினால் கடும் நடவடிக்கை – தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

மாணவர் சேர்க்கை நடத்தினால் கடும் நடவடிக்கை – தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு அறிவிப்புக்கு முன்பு தனியார் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியான பிறகே அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும். அதற்கு முன்பாக தனியார் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடத்தினால் அந்த பள்ளிக்கூடங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் பள்ளிக்கூடங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை, திருவள்ளூர், அரியலூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் பிளஸ்-2 பொதுத்தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் வர மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் விடைத்தாள்கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு முன்பு தனியார் பள்ளிக்கூடங்களில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தகுந்த ஆதாரத்துடன் புகார் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan