மனிதநேயம் பிரதமர் மோடியிடம் இப்போது இல்லை: சஞ்சய் ராவத் தாக்கு

மனிதநேயம் பிரதமர் மோடியிடம் இப்போது இல்லை: சஞ்சய் ராவத் தாக்கு

துப்புரவு தொழிலாளர்களின் பாதம் கழுவிய பிரதமர் மோடியின் மனிதநேயம் இப்போது மறைந்து விட்டது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

மும்பை :

சிவசேனா எம்.பி.யும், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் நிர்வாக ஆசிரியருமான சஞ்சய் ராவத் சாம்னாவில் எழுதியுள்ள வாராந்திர கட்டுரையில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி வாரணாசியில் 4 துப்புரவு தொழிலாளர்களின் கால்களை கழுவி மனிதநேயத்தை நமக்கு காட்டியிருந்தார்.

கடந்த 3 மாதங்களில் அந்த மனிதநேயம் மறைந்து விட்டதாக தெரிகிறது. கொரோனா வைரஸ் அந்த மனித நேயத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.

காஷ்மீர் பண்டிதர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் மற்றும் சொந்த நாட்டில் அகதிகளாக வாழ்வது போன்ற பிரச்சினைகள் அடிக்கடி அரசியல் மயமாக்கப்படுகின்றன. இன்று சுமார் 6 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இதேபோல வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஹிட்லரின் கொடுமை மற்றும் யூதர்களிடம் நடந்து கொண்டது குறித்து கோபப்படுபவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என்ன செய்தார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும்.

மகாராஷ்டிராவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கம் தோல்வி அடைந்து விட்டது என எதிர்க்கட்சி தொடர்ந்து கூறி வருகிறது.

உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் அரசாங்கங்கள் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய தோல்வி அடைந்துள்ளன என்பதை மறந்துவிடக் கூடாது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா குஜராத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் இந்த பொறுப்பில் இருந்து தப்ப முடியாது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பிரதமருக்கு எழுதும் கடிதங்களால் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கிளர்ந்தெழுந்து வருகிறார். அவரை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவதை தடுத்தது யார்?

சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தை கவர்னரின் உதவியுடன் கலைப்பதே பட்னாவிசின் ஒரே நிகழ்ச்சி நிரல்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan